கோழி கழிவுகளால் கடும் துர்நாற்றம்

ராமநாதபுரம், நவ.14: நயினார்கோவிலில் வாரச்சந்தை அருகே கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதால்  ஏற்படும் துர்நாற்றம் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நயினார்கோவிலில் வாரந்தோறும் வாரச்சந்தை நடக்கும். சமீப காலமாக அங்குள்ள  கோழி கடைகளில் வெட்டப்படும் பிராய்லர் கோழிகளின் கழிவுகள் வாரச்சந்தைக்கு  அருகில் கொட்டப்பட்டு வருகின்றன. அதன் அருகிலேயே தொடக்க வேளாண்மை  கூட்டுறவு சங்கம், நூலகம், சமுதாயக்கூடம் உள்ளது. தினந்தோறும்  கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம்  வீசுகிறது.

இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்த செல்ல முடியவில்லை.  இந்நிலையில் கோழிக் கழிவுகளினால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக  அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோழிக்கடை  உரிமையாளர்கள் இறைச்சி கழிவுகளை கொட்ட மாற்று ஏற்பாடு செய்யவேண்டுமென்று  பொதுமக்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை  சேர்ந்த முருகன் கூறுகையில், ஊராட்சியின் பல பகுதியில் போதிய இடமிருந்தும்  வியாபாரிகள் வாரச்சந்தை அருகில் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால்  ஏற்படும் துர்நாற்றம் காரணமாக வாரச்சந்தை அருகே யாரும் நடமாட முடியவில்லை.  சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று  கூறினார்.

Related Stories: