நகராட்சி அலட்சியத்தால் திருத்தணி வீதியில் குப்பை குவியல்

திருத்தணி, நவ.14 : திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட கந்தசாமி தெரு, அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை மேட்டுத் தெரு மற்றும் பைபாஸ் சாலை, பஜார் சாலைகளில் ஏராளமான கடைகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள், பொருட்கள் வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். இப்பகுதி கடைகளில் சேரும் பிளாஸ்டிக் கவர், குப்பையை அவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போடாமல் சாலையிலேயே தூக்கி வீசுகின்றனர். இவ்வாறு வீசப்படும் குப்பை, காற்றில் பறந்து சாலை முழுவதும் பரவிக் கிடக்கிறது.

அதுமட்டுமன்றி சாலையில் கொட்டி விடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் குப்பையில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் மேட்டு தெரு, சென்னை பைபாஸ் சாலை, காந்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை அப்பகுதியில் உள்ள ஆறு மற்றும் காலியாக உள்ள வீட்டுமனைகளில் போடுகின்றனர்.

இவைகள் அழுகி தூர்நாற்றம் வீசுகிறது. மக்கிய கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் கிருமிகளால் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.

இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல. எனவே, இந்த விஷயத்தில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: