பணம் வாங்கி ஏமாற்றியதால் முன்விரோதம் நண்பனை தீர்த்துக்கட்ட முயன்ற வாலிபர் கைது

பல்லாவரம், நவ. 14: பல்லாவரம் அடுத்த ஈசா பல்லாவரம், பெரிய பாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (31). தனது வீட்டின் அருகே கோழிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு தொழில் ரீதியாக வந்து சென்ற இஸ்மாயில் (42) என்பவருடன் தமீம் அன்சாரிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் தொழில் ரீதியாக பழகிய இருவரும், பின்னர் இணை பிரியாத நண்பர்களாகினர். இதை பயன்படுத்தி தமீம் அன்சாரி, இஸ்மாலிடம் அதிக அளவு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அதை திருப்பி தராததால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். ஒரு கட்டத்தில்,  ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். தன்னை ஏமாற்றிய தமீம் அன்சாரியை பழிவாங்க இஸ்மாயில் முடிவு செய்தார். அதன்படி, கடந்தாண்டு கூலிப்படையை வைத்து  தமீம்அன்சாரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த தமீம் அன்சாரி, நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.  

ஆனாலும், ஆத்திரம் அடங்காத இஸ்மாயில், மீண்டும் கூலிப்படைக்கு 5 லட்சம் கொடுத்து தமீம் அன்சாரியை கொலை செய்ய திட்டம் தீட்டினார். கூலிப்படையினர் அடுத்த வாரம் பல்லாவரத்தில் வைத்து தமீம் அன்சாரியை கொலை செய்ய திட்டம் வகுத்து வந்தனர். இதற்காக, நேற்று காலை தமீம் அன்சாரியை நோட்டம் விட தொடங்கினர்.

இந்நிலையில், பல்லாவரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கும்பல் சுற்றித் திரிவதை கண்டுபிடித்த பல்லாவரம் போலீசார், அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, அவர்களின் கொலை திட்டம் தெரியவந்தது. இதை தொடர்ந்து இஸ்மாயில் உள்ளிட்ட கூலிப்படை கும்பலை கைது செய்த போலீசார், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: