வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் நவ.8: கடலில் ஏற்படும் காற்றின் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குசெல்லவில்லை.வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்சமயம் மீன்பிடி சீசன் துவங்கியுள்ளது. இங்கு பல மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும் வந்து தங்கி மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக வெப்பசலனம் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. மேலும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் வானிலை ஆராய்ச்சி மையமும் கடல் சீற்றமாக இருக்கும் எனவும், காற்று பலமாக அடிக்கும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி மீன்வளத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளின்படி மீனவர் கிராமங்களில் ஒலி பெருக்கி மூலம் 6, 7, 8 ஆகிய 3 தினங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என விளம்பரம் செய்துள்ளனர். இதனால் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 1500க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்கள் வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்பிடிக்க மீனவர்கள் செல்லாததால் இத்தொழிலை நம்பியுள்ள வேன் ஓட்டுநர்கள், ஐஸ் பேக்டரி, சைக்கிள் மீன் வியாபாரிகள் என ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி

பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: