அணுகுச்சாலை இல்லாததால் மக்கள் அவதி பன்றிகளால் கடலை சாகுபடி நாசம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

விருதுநகர், நவ. 1: விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில், வேளாண்மைத்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் நடைபெற்ற விவாதம் வருமாறு: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன்: மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, நரிக்குடி, கரிசல்குளம், கடம்பன்குளம், கட்டனூர் மற்றும் முக்குளம் பகுதிகளில் சுமார் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ஏக்கர் வரை கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடலைச் செடிகளை  மலைப்பகுதி மற்றும் காட்டுப்பகுதில் இருந்து வரக்கூடிய பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால், ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை இழப்பீடு ஏற்படுகிறது.  விவசாயிகள் இரவு முழுதும் காவல் காத்தாலும், கடலை பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே, பன்றிகளை சுடுவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

கலெக்டர்: மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் பன்றிகளை சுடுவதற்கான ஆவணங்களை தயார் செய்து, எனது பார்வைக்கு அனுப்பு உத்தரவிட்டுள்ளேன். இது குறித்து உயரதிகாரிகளிடம் கலந்தாலோசித்து இந்த மாதத்திற்குள் பன்றிகளை சுடுவதற்கு ஆணை வழங்கப்படும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா: கிராம நிர்வாக அதிகாரிகள் விவசாய நிலங்களை சரியாக பார்வையிட்டு, பயிர் அடங்கலை பதிவு செய்வதில்லை. பயிர் அடங்கல் இல்லாததால் காப்பீட்டு தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மாவட்டம் முழுவதும் எந்தெந்த பயிர்கள் எவ்வளவு ஏக்கர் பயிரிடப்படுகிறது என்கிற புள்ளி விவரங்களில் தவறு ஏற்படுகிறது. கலெக்டர்: விவசாயிகளே நேரடியாக இணையதளத்தில் தங்களது பட்டா எண் மூலம் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிரை பதிவு செய்து, இந்த மாத இறுதிக்குள் இணையதளத்திலேயே பயிர் அடங்கல் பெறலாம். ராமச்சந்திர ராஜா: சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால், பிளவக்கல் மற்றும் ஆனைக்குட்டம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: பிளவக்கல் அணையை இன்று (நவ.20 திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனைக்குட்டம் அணை தனது முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் இரண்டடி உள்ளது. முழு கொள்ளளவு எட்டியபின் அணை திறக்கப்படும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன்: ஆனைக்குட்டம் அணையில், ஒரு மதகு பல மாதங்களாக பழுதடைந்துளது. இதனால், தண்ணீர் அணையிலிருந்து வெளியேறுகிறது. உடனடியாக மதகை மராமத்து செய்ய வேண்டும். கலெக்டர்: பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் மதகு சீரமைக்கப்படும். விஜயமுருகன்: குல்லுர்சந்தை அணையில் ஆகாயத்தாமரை அதிகளவு ஆக்கிரமித்துள்ளது. அணையில் இருக்கக்கூடிய நீரை வீணாக்காமல் விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். கலெக்டர்: அணையில் இருக்கக்கூடிய ஆகாயத்தாமரையை அப்புறப்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகாயத்தாமரை முற்றிலும் அகற்றப்பட்ட பிறகு அணையிலிருந்து நீர் விவசாயத்துக்கு வழங்கப்படும்’ என்றார்.

Related Stories: