போடி கொட்டக்குடி ஆற்றில் அரைகுறையாய் நிற்கும் அகல ரயில்பாதைப்பணி தென்னக ரயில்வே கவனிக்குமா?

போடி, நவ.1: கொட்டக்குடி ஆற்றில் அரைகுறையாய் நிற்கும் போடி அகலரயில்பாதைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். போடியிலிருந்து மதுரை வரை 90 கி.மீ தூரம் குறுகிய ரயில்பாதை ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. தமிழக மற்றும் கேரளா மலைப்பகுதிகளில் விளையும் ஏலக்காய்,காப்பி,  தேயிலை,மிளகு, மாங்காய், இலவு போன்ற நறுமணப்பொருட்களை இங்கிலாந்திற்கு  கொண்டு செல்வதற்கு இந்த பாதை வழியே ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில்பாதையில் போடி அருகே குரங்கணியிலிருந்து வரும் கொட்டக்குடி ஆற்றில் பல இடங்களில் ரயில் கடந்து செல்வதற்கு கல்பாலங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 1924ம் ஆண்டு துவங்கப்பட்ட ரயில் சேவை 96 ஆண்டுகளாக நடைபெற்றது. போடி அகலரயில்பாதைக்கப்படுவதாக கடந்த 2010ம் ஆண்டு இந்த ரயில்பாதைக்கு மூடுவிழா காணப்பட்டது. புதிய திட்டத்திற்கு  மத்திய அரசு 75 சதவீத நிதியையும், 25 சதவீத நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், மாநில அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் பணிகள் துவங்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி விட்டது. அத்துடன் ஏற்கனவே இருந்த ரயில் பாதையையும் அறக்கப்பட்டு விட்டன.

அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களால் போடி அகல ரயில்பாதைக்கு சில ஆண்டுகளாக பணி நடந்து வருகிறது. போடி அருகே துரைராஜபுரம் காலனி பகுதியிலுள்ள கொட்டக்குடி ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த கல்பாலம் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக புதிய பாலம் அமைக்க கட்டுமானப் பணிகள் துவங்கியது. இதற்காக நான்கு பில்லர்கள் அமைக்கப்பட்டது. தமிழக, கேரளா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால்  ஒன்றரை மாதமாக கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முழுமையாக நிதி ஒதுக்காமல் அறைகுறையாக ஒதுக்கி பணிகள் நடந்து வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக அகல ரயில்பாதை திட்டம் என்று கூறி போடி பகுதியின் வர்த்தக சேவையை மத்திய, மாநில அரசுகள் துண்டித்துள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் குறைந்தும் பணியை துவக்காமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, ரயில்வே நிர்வாகம் இப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: