மக்காச் சோளப்பயிரில்புழுக்களைக் கட்டுப்படுத்தவேளாண்துறை ஆலோசனை

தேவதானப்பட்டி, நவ.1: பெரியகுளம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காசோளப்பயிரில் புழுத்தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தற்போது இறவை பாசனம் மூலம் ஆங்காங்கு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மக்காச்சோளப்பயிரில் படைப்புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இந்த புழுக்களானது இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி சேதத்தை உண்டு பண்ணும். இதனால் பச்சையம் இழந்து பயிர் வெண்மையாக காணப்படும். இளம் புழுக்கள் நூலிகளை உருவாக்குவதன் மூலம் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு சென்று சேதத்தை உண்டு பண்ணும். இளம் செடிகளில் இலை உறைகளையும், முதிர்ந்த செடிகளில் கதிரின் நூலிழைகளையும் சேதப்படுத்தும். ஒரு இலை உறையினுள் இரண்டு, மூன்று புழுக்கள் வரை இருக்கும்.

ஆகையால் இலை விரிவடையும் போது வரிசையாக துளைகள் தென்படும். இதனைக் கட்டுப்படுத்த அதிகளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்கவேண்டும். புழுக்கள் குழுவாக இருப்பதால் அவற்றை சேகரித்து அழிக்கலாம். பொருளாதார சேத நிலையை தாண்டும் போது கீழ்கண்ட மருந்தில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். பேசில்லஸ் துரின்சியன்சிஸ் 2மி.லி/லிட்டர், ஸ்பினோசேட் 0.5மி.லி/லிட்டர், இன்டாக்சோகார்ப் 1மி.லி/லிட்டர், இமாமெக்டின் பென்சோயேட் 0.4கிராம்/லிட்டர், இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: