இ.சேவையில் இணையம் முடக்கம் 10 நாட்களாக மக்கள் அலைக்கழிப்பு

பரமக்குடி, அக்.17: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இ.சேவை மையங்களில்  இணைய சேவை முடங்கியுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். நேரடி பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல் பணிகள், வருவாய் மற்றும் நில அளவைத்துறை பணியாளர்களால் தாலுகா அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2003 முதல் கைகளால் எழுதிகொடுக்கும் பட்டா முறை மாற்றப்பட்டு கம்யூட்டர் வழியாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நிலம் என்னும் மென்பொருள் இணையதள வசதி கொண்டுவரப்பட்டது. சொத்து விபரங்கள் குறித்த அசல் ஆவணங்களை கொடுத்து இ.சேவை மையங்களில் ஸ்கேன் எடுத்துக் கொண்டு திரும்ப விண்ணப்பதாரரிடம் கொடுக்கப்படும். இதற்கு ஒப்புகை சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. பட்டா மாற்றம் செய்யப்பட்டவுடன் இ.சேவை மையங்களில் பட்டா வாங்கிக் கொள்ளாலம். இதில் க்யூ.ஆர் கோடு உள்ளதால் தாசில்தார் கையொப்பம் தேவையில்லை. இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படாமல் தங்களின் இருப்பிடத்தில் இருந்து கொண்டே பட்டா மற்றும் பட்டா மாறுதல்களை பெற்றுக்கொண்டனர். விண்ணப்பத்தின் தன்மைக்கு ஏற்ப கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர்களுக்கு விண்ணப்பம் இணையவழி வாயிலாக மாற்றம் செய்யப்படும். உட்பிரிவு இருக்கும் பட்சத்தில் குருவட்ட சர்வேயருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த பத்து நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இ.சேவை மையத்திலிருந்து

விண்ணப்பங்கள் இணையவழியில் செல்லவில்லை. இதற்கான இணையவழி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக சேவை மைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பட்டா மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பங்களை வாங்காமல்  ஊழியர்கள் அலைக்கழிக்கின்றனர். இதே நிலை தமிழகம் முழுவதும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இ.சேவை மையங்களில் இணையவழி முடக்கத்தை சீர்செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: