15 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை

ராமநாதபுரம், அக்.16: ராமநாதபுரம் நகராட்சி, பெரியார் நகர் பகுதி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘‘பெரியார் நகரில் கரும்புக்கொல்லை, கூரிச்சாத்த அய்யனார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் அரசு அலுவலர்கள், அரசு பொதுத்துறை ஊழியர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தர வேண்டி பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பல வீடுகளில் திருட்டுச்சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தெருவிளக்குகளை பராமரிக்க தனியாருக்கு விடப்பட்டதால் முறையாக பராமரிப்பதில்லை.

எங்கள் பகுதியில் பழைய மின் கம்பங்களை மாற்றி புதிய மின்விளக்குகள் அமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர். இதேபோல் ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு மகர்நோன்பு பொட்டல் 2, 3வது வீதிகளை சேர்ந்த மக்கள், ‘‘மூன்று ஆண்டுகளாக காவிரி கூட்டு குடிநீர் எங்கள் பகுதிக்கு வரவில்லை. இரண்டு வருடங்களாக நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இணைப்பை துண்டித்து முன்பணத்தை திரும்ப வழங்கிட வேண்டும்’’ என மனு அளித்தனர்.

Related Stories: