துவரங்குறிச்சியில் அடிப்படை வசதியின்றி இயங்கும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி

கும்பகோணம், அக். 11:  துவரங்குறிச்சியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருகிறது என்று எம்எல்ஏவிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர். கும்பகோணம் அடுத்த துவரங்குறிச்சியில் 200க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக வாய்க்கால் தூர்வாரவில்லை. இதனால் கொசுக்களின் பிறப்பிடமாக மாறி வருகிறது. இந்த பகுதியில் 50 ஆண்டுகளாக ஏஆர்ஆர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், 29 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கும்பகோணம் பகுதியில் மழை பெய்து வருகிறது. எனவே வாய்க்கால் தூர்வாராததால் ஏற்படும் சிரமம் குறித்து எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் துவரங்குறிச்சி பொதுமக்கள், சவுராஷ்டிரா சபாவினர் தெரிவித்தனர். இதைதொடர்ந்து நேற்று துவரங்குறிச்சி பகுதியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்காலை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் தமிழழகன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் ஏஆர்ஆர் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு சென்று கட்டிடங்களின் சுவர்களில் மழைநீர் கசிந்து ஆபத்தான நிலையில் இருப்பதை பார்வையிட்டார்.

அப்போது பள்ளிக்கு தரமான குடிநீர் வசதிகள் கிடையாது, கட்டிட சுவர்களின் மழைநீர் கசிந்து வருவதால் அச்சத்துடனேயே பள்ளிக்கு சென்று வரும் நிலை உள்ளது. வகுப்பறையில் மின்வயர்கள் அறுந்து தொங்கி கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறையில் தரமான கதவுகள், தாழ்ப்பாள் இல்லாமல் ஜன்னல் கதவுகளை பொருத்தியுள்ளனர். இதனால் பள்ளியின் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பில்லாமல் உள்ளது. மொத்தத்தில் பள்ளியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் தலைைம ஆசிரியர் அறிவுடைநம்பி, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் கூறுகையில், பள்ளி கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து தருவேன். பராமரிக்கப்படாமல் இருக்கும் பழமையான இப்பள்ளியின் நிலை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அனந்தராமன், வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சவுராஷ்ட்ரா சபா தலைவர் ஹரிதாஸ், நிர்வாகி சீனிவாசன் உடனிருந்தனர்.

Related Stories: