பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஈரோடு, அக்.5:  ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 தமிழகத்தில் வரும் 2019ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு, தனியார் பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டது.  இந்த உத்தரவு கடந்த மாதம் 15ம் தேதி முதல் அமுலுக்கு வந்தது.

 இந்நிலையில், ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை மாணவிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில்  மாணவிகள் பேக்கில் வைத்திருந்த ஒருமுறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் தண்ணீர் பாட்டில்கள், கூல்டிரிங்ஸ் பாட்டில், திண்பண்டங்கள் கொண்டு வந்த கேரி பேக், கவருடன் உள்ள சாக்லெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியை சுகந்தி கூறுகையில், எங்கள் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 1,400 மாணவிகள் படித்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் மாணவிகளிடம் ஏற்படுத்தியுள்ளோம். இருப்பினும் இன்று(நேற்று) பள்ளியின் என்எஸ்எஸ் சார்பில் மாணவிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை பள்ளியின் வளாகத்திலே பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.   எங்கள் பள்ளியில் பிளாஸ்டிக் இல்லா வளாகமாக மாற்ற ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாமல் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. நாளை(இன்று) பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என வலியுறுத்தி எங்கள் பள்ளி  மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது என்றார்.

Related Stories: