4 மாதத்தில் மட்டும் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 5,675 டன் நச்சுக்கழிவு அகற்றம்

ஈரோடு, அக். 7: பெருந்துறை  சிப்காட் வளாகத்தில் இருந்து கடந்த 4 மாதத்தில் மட்டும் 5675 டன்  நச்சுக்கழிவு அகற்றப்பட்டுள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை  சிப்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கை  பற்றிய ஆய்வு கூட்டம் சிப்காட் வளாகத்தில் உள்ள  மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு  பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி தலைமை தாங்கினார்.மக்கள் நலச்  சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்  ரகுநாதன், பொன்னையன், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்  மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் பேசினர்.

பின்னர், மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட  பொறியாளர் சரவணக்குமார், சிப்காட் திட்ட அலுவலர் சாய்லோகேஷ் ஆகியோர் கூறியதாவது: கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கடந்த மாதம் 30ம் தேதி வரை 5  ஆயிரத்து 675 டன் திட நச்சுக்கழிவுகள் சிப்காட் வளாகத்தில் இருந்து  அகற்றப்பட்டுள்ளன. சிப்காட் வளாகத்தில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையம்  அருகில் இருந்து கசிவுநீர் வெளியேறி குட்டப்பாளையம் ஓடை வழியாக சென்று  ஓடைக்காட்டூர் குளத்தில் கலப்பதை தடுக்கும் வகையில் குட்டப்பாளையம் அருகில்  35000 லிட்டர் கொள்ளவு கொண்ட இரும்பு நிலத்தொட்டி அமைக்கப்பட்டு அதில்  கசிவுநீர் சேமிக்கப்பட்டு டேங்கர் லாரி மூலம் தொழிற்சாலைகளுக்கு  கொண்டு  செல்லப்பட்டு மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 சிப்காட்  வளாகத்தில் வாகன இயக்கங்களை கண்காணிக்க 26 இடங்களில் 60க்கும் மேற்பட்ட  சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிப்காட்  வளாகத்தில் நிலத்தடி நீரின் ஓட்டத்தை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட  பகுதிகளை கண்டறியவும் ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி  நிறுவனம் மூலம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல சிப்காட்  சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 180 இடங்களில் இருந்து மண் மாதிரிகள்  எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  சிப்காட் வளாகத்தில் மிகவும்  பழுதடைந்த நிலையில் உள்ள அனைத்து சாலைகளையும் ரூ.12 கோடி செலவில்  புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. சிப்காட்டில் விரைவில் முதலுதவிக்கான  சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு  பேசினர்.

Related Stories: