காவேரிப்பாக்கத்தில் தனியார் நிறுவனம் நூதன மோசடி ஏழைகளுக்கு வரும் இலவச காஸ் கடைகளுக்கு வழங்கி முறைகேடு

காவேரிப்பாக்கம், அக். 11: காவேரிப்பாக்கத்தில் ஏழைகளக்கு வரும் இலவச காஸ் அவர்களுக்கு வழங்கியதாகவே கணக்கு காட்டி சிலிண்டர்களை கடைகளிலும், திருமண மண்டபங்களிலும் விற்பனை செய்து தனியார் நிறுவனம் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான காஸ் ஏஜென்சி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதில், காவேரிப்பாக்கம், அத்திப்பட்டு வேகாமங்கலம், மாமண்டூர், ஓச்சேரி, துறைபெரும்பாக்கம், மகாணிப்பட்டு, ஈராள்சேரி, பன்னியூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர்.

மேலும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பொதுமக்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நிறுவனத்தினர் ₹500 பெற்றுக்கொண்டு பயனாளிகளுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்குகின்றனர். இவை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ேமலும், இலவச காஸ் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த சிலருக்கு இலவச காஸ் இணைப்பு கிடைத்துள்ளது.

இதனை இந்த தனியார் நிறுவனம் பயனாளிகளின் கையெழுத்து போட்டு அவர்கள் பெற்றுக்கொண்டதாக அவர்களின் பெயரில் காஸ் எடுத்து கடைகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளது.

இந்த தகவல் அறிந்த பயனாளிகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, சரியான பதில் கூறாமல் உங்களுடைய காஸ் இணைப்பை துண்டித்து விடுவோம். எங்களை ஒன்றும் செய்யும் முடியாது என மிரட்டி அனுப்பியதாக பாதிக்கப்பட்ட பயனாளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், பயனாளிகள் பில் போட்டு வாங்கும் காஸ் இணைப்பிற்கு பில்லுக்கு மேல், சப்ளை செய்ய வருபவர்கள் ₹50 வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

காஸ் நிறுவனம் உள்ள இடத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிற்கு இலவசமாக சிலிண்டர்கள் டெலிவரி செய்ய வேண்டும். அதற்கு மேல் ஒரு கிலோ மீட்டருக்கு ₹2 பெற்றுக்கொள்ளலாம் என்ற அரசு விதிமுறை இருந்தும் இந்த நிர்வாகம் ஒரு சிலிண்டருக்கு கூடுதலாக ₹50 வசூல் செய்து பயனாளிகளை சுரண்டி வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தபகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: