எவர் யங் மஞ்சுவாரியர்... ஃபிட்னெஸ் டிரிக்ஸ்

நன்றி குங்குமம் டாக்டர்  

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை மஞ்சு வாரியர்.  தனுஷ்  நடித்த “அசுரன்” படம் மூலம் தமிழில் கால்பதித்த மஞ்சு வாரியர், தனது தேர்ந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிட்டார். அதையடுத்து  பிரியதர்ஷன்  இயக்கத்தில் “மரக்கர்  அரபிக்கடலின்  சிம்ஹம்” என்ற  படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு சிறிய  இடைவெளி எடுத்துக்கொண்டு, தற்போது,  அஜித் நடிப்பில்  வெளியாகியிருக்கும்  “துணிவு”  படத்தில் நடித்திருக்கும்  மஞ்சுவுக்கு,  முதன்முறையாக  ஆக்‌ஷன் நாயகியாக  வித்தியாசமான  கதைகளத்தில் நடித்திருப்பது  மகிழ்ச்சியளிக்கிறதாம்.

இதையடுத்து, தமிழில் சந்தோஷ்சிவன் இயக்கத்தில்  “சென்டிமீட்டர்”  என்ற  படத்தில்  தற்போது  நடித்து வரும்  மஞ்சுவாரியர்  அடுத்தபடியாக,”பங்கு” என்ற   மலையாளப் படம் ஒன்றில்  கையெழுத்திட்டிருக்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ராஜேஷ் இயக்குகிறாராம்.  ஜனவரி  மாத  இறுதியில்  தொடங்குகிறது.  தற்போது,  43  வயதாகும், மஞ்சுவாரியர் இந்த  வயதிலும் இளமையான தோற்றப் பொலிவுடன்  எப்படி காட்சி தருகிறார் என்று தனது பிட்னஸ்  ரகசியங்கள்  குறித்து பகிர்ந்து  கொண்டவை:

உணவுப் பழக்கம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துவேன். அதில் அரிசி சாதம்  குறைவாகவும்,  காய்கறிகள்  அதிகளவிலும் எடுத்துக் கொள்வேன். அதுபோன்று  அவ்வப்போது சீசனுக்கு ஏற்றவாறு கிடைக்கும்  பழங்கள்  அனைத்தையும்  அதிக அளவில்  எடுத்துக் கொள்வேன். மேலும், ஓட்டல்  உணவுகளை  பெரும்பாலும் தவிர்த்துவிட்டு,  வீட்டில்  சமைக்கும்  உணவுகளை  மட்டுமே  விரும்பி சாப்பிடுவேன்.

அதுபோன்று  எண்ணெயில்  பொரித்து,  வறுத்த உணவுகளை  முற்றிலும்  தவிர்த்துவிடுவேன்.  அதுபோன்று  அவ்வப்போது  நொறுக்குத்தீனிகளை  கொறிக்கும்  பழக்கமும்  என்னிடம் இல்லை. இனிப்புகள்  சாக்லேட் போன்றவற்றையும் குறைந்த அளவே  எடுத்துக் கொள்வேன்.  

நடனப் பயிற்சி:  நடனம்  எனக்கு மிகவும் பிடித்தமான  ஒன்று. அடிப்படையில்  நான் ஒரு கதகளி நடனக்கலைஞர்  ஆவேன்.  நடனத்தின்  மீது  ஆர்வம் ஏற்பட  என் அம்மாவே  காரணம்.  அவர்,  நல்ல டான்சர்.  சிறுவயதிலிருந்தே  அம்மா ஆடுவதைப் பார்த்து பார்த்து  எனக்கும்  நடனத்தின்  மீது  ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தினசரி தவறாமல்  ஒரு மணி நேரமாவது  நடன பயிற்சி  செய்துவிடுவேன். இந்த நடனப்பயிற்சி  என் உடலை  ஒல்லியாகவும்,  கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.   

யோகாப்பயிற்சி:  உடலை  ஃபிட்டாக  வைத்துக் கொள்ளவதில் நடனத்திற்கு அடுத்தபடியாக எனக்கு  பெரிதும் உதவுவது யோகாப் பயிற்சி. குறைந்தபட்சம்   தினசரி அரை மணிநேரமாவது  யோகாப் பயிற்சி  செய்துவிடுவேன்.  யோகாப் பயிற்சி   என்  மனதுக்கு  அமைதிதருவதோடு,  என்னை எந்த  சூழ்நிலையிலும்  டென்ஷன் ஆகாமல்,  சாந்தமாக  வைத்துக் கொள்ள உதவுகிறது.

நடைப்பயிற்சி: தினசரி  ஜிம்  சென்று  உடற்பயிற்சி  செய்யும்  பழக்கம் என்னிடம்  இல்லை. என்றாலும், தினமும் காலையில் ஒருமணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். நடைப்பயிற்சியால்  உடலில்   சேரும்  தேவையற்ற  கலோரிகளை  எரித்து  உடலை  ஃபிட்டாக  வைக்க உதவுகிறது. மகிழ்ச்சியாக  இரு உடற்தகுதி மற்றும் உணவுப் பழக்கங்களுக்கு  எவ்வளவு  முக்கியத்துவம்  தருகிறோமோ  அதுபோலவே,  முடிந்த அளவு மகிழ்ச்சியாக  இருக்கவும் முயற்சி செய்ய வேண்டும். மன மகிழ்ச்சியே  நம்மை  எப்போதும்   ஆரோக்கியமாகவும்,  அழகாகவும்  வைத்திருக்க உதவும்.

பியூட்டி:  பொதுவாக, சூட்டிங்  நேரத்தைத் தவிர,  நான்  மேக்கப்  செய்து கொள்வதை  அவ்வளவாக விரும்புவதில்லை. எனது  சொந்த விஷயங்களுக்காக  வெளியிடங்களுக்குச் செல்லும்போது,  எந்தவித மேக்கப்பும் இல்லாமல்தான் செல்வேன்.  மற்றபடி  எனது இளமையான  தோற்றப் பொலிவுக்கு  காரணம்  தேங்காய்  எண்ணெய்தான். தினசரி  குளிப்பதற்கு முன்பு  அரைமணிநேரம் தேங்காய்  எண்ணெயை  உடல் முழுவதும் தடவிக் கொள்வேன்.  அதுபோன்று  எங்களது  சமையலிலும் தேங்காய் அதிகளவில்  பயன்படுத்துவதால், இயற்கையாகவே  என்  ஸ்கின்  பளபளப்புடன்  காணப்படுகிறது.

மேலும், காலை எழுந்ததுமே  1 டம்ளர்  தண்ணீர் அருந்திவிட்டுதான், யோகா, தியானப் பயிற்சிகள்  மேற்கொள்வேன். அவ்வப்போது  தண்ணீர்  நிறைய  குடிப்பதும் கூட எனது தோலை வறண்டுவிடாமல், ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுவதோடு, தோலுக்கு  மினுமினுப்பையும்  தருகிறது. ஆரோக்கியமான  உணவு, பச்சை காய்கறிகள்,  பழங்கள்  என  எடுத்துக் கொள்ளும் இந்த உணவு பழக்கமே,  உடலை  பருமனாக்கிவிடாமல்   ஃபிட்டாக  வைத்திருக்க உதவுகிறது.

தொகுப்பு : ஸ்ரீ தேவி குமரேசன்

Related Stories: