பயிர்களை நாசப்படுத்தும் எலிகளின் அட்டகாசத்தை ஒழிப்பது எப்படி? வேளாண்மைத்துறை ஆலோசனை

பரமக்குடி, செப்.19:  வயல்களில் எலிகளின் அட்டகாசத்தை ஒழிப்பது எப்படி என்பது குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். விவசாய நிலங்களில் விளைவிக்கப்படும் பயிர் வகைகளை உண்ண வரும் எலிகளால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதனை தவிர்க்கும் முறை குறித்து  வேளாண் அதிகாரிகள் கூறியுள்ளதாவது, வயல்களில் பயிர் செய்ய ஆரம்பிக்கும் முன்னரும் பயிரில்லாத காலத்திலும் கூடுமான வரை எல்லா எலி வளைகளையும் தோண்டி அழிக்க வேண்டும். வரப்புகளின் ஓரங்களில் களை எடுத்து மண் அடைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எலிகள் வளைகளை அமைக்க இயலாது. உழும்போது ஆழமாக உழுவதன் மூலம் எலி வளைகளை உடைக்கலாம். குறுகிய வரப்புகள் அமைக்க வேண்டும். புதர்களை அழிக்க வேண்டும்.

வைக்கோல் போர்களை வயலுக்கு அருகில் அமைக்க கூடாது. ஆந்தைகள் போன்ற இரவு பறவைகள் அமர ‘டி’ வடிவ குச்சிகளை நட வேண்டும். அதன் மூலம் எலிகளை இயற்கை முறையில் அழிக்கலாம். வெளிச்சமான விளக்கின் மூலம் ஓடாமல் நிற்கும் எலிகளை தடியால் அடித்து கொல்ல வேண்டும். எலிகளின் இயற்கை எதிரிகளான ஆந்தை மற்றும் பாம்பு போன்றவற்றை அழிக்காமல் இருக்க வேண்டும். மூங்கில் கிட்டிகளை 1 ஏக்கருக்கு 20 கிட்டிகள் வீதம் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம்.

வாயகன்ற பானைகளில் சாணம் கலந்த நீரை நிரப்பி மேற்பரப்பில் சோறு போட்டு வைத்தால் அவற்றை உண்ண வரும் எலிகள் அந்த சாண நீரில் மூழ்கி இறந்து விடும். எ.எல்.பி போன்ற விஷ மாத்திரைகளை வளைக்கு 1 வீதம் போட்டு ஈரமண் போட்டு மூட வேண்டும். துத்தநாக பாஸ்பைடு விஷ உணவு தயாரித்து வைத்து எலிகளை அழிக்கலாம். ஆண்ட்டிகொயாகுலண்ட் கலவை தயாரித்து வைத்து எலிகளை அழிக்கலாம். ப்ரோமோடையலான் மருந்து கொண்ட முஷ்&முஷ் என்ற உணவு கட்டியை ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வைத்து எலிகளை அழிக்கலாம். இவ்வாறு கூறி உள்ளனர்.

Related Stories: