பவுஞ்சூர் பஜார் பகுதியில் பல ஆண்டுகளாக ஏலம் விடாததால் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள கடைகள்

செய்யூர், செப். 19: செய்யூர் அருகே திருவாதூர் ஊராட்சியில் உள்ள வணிக வளாகங்கள், தனியார் சிலரின் அராஜகத்தால் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக ஏலம் விடப்படாமல் உள்ளது. எனவே பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லத்தூர் ஒன்றியம் திருவாதூர் ஊராட்சியில் பவுஞ்சூர் பஜார் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சிறு, குறு கடைகள் செயல்படுகின்றன. இதில் ஊராட்சிக்கு சொந்தமான 29 வணிக கடைகள் பல ஆண்டுகளாக செயல்படுகிறது.

அரசு விதிமுறைகள் படி ஊராட்சிக்கு சொந்தமான வணிக கடைகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விட வேண்டும். ஆனால் இந்த ஊராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஏலம் விடப்பட்ட கடைகள், அதன் பின் இதுவரையில்  ஏலம் விடாமல் உள்ளன. இதனால், கடையின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மேலும், அதே பகுதியை சேர்ந்த சிலர் பதிவில்லாத சங்கத்தின் பெயரை கூறி, கடைகளை மறு ஏலம் விடாத வகையில் பல்வேறு அராஜக போக்கில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் கடைகளை, மேல் வாடகைக்கு விடுவது, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகளை தன் வசம் வைத்துக் கொண்டு அவ்வழியாக செல்லும் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சிறு, குறு கடைகளை அமைத்து அவைகள் மூலம் பணத்தை சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளை அணுகினால், அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை என கூறப்படுகிறது. எனவே இப்பிரச்னைக்கு தீர்வு மாவட்ட நிர்வாகமே. நேரடியாக தலையிட்டு உடனடி தீர்வு காண்பதோடு, வணிக கடைகளை மறு ஏலம் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

திட்டப்பணிகள் பாதிப்பு

முறையாக கடைகளை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் வாடகையை ஊராட்சியில் உள்ள குடிநீர், சாலை உள்பட அடிப்படை வசதிகளையும், திட்டப்பணிகளையும் மேற்கொள்ளலாம். ஆனால், இந்த கடைகள் ஏலம் விடாமல் உள்ளதாலும், முறையான வாடகை பெறாததாலும், ஊராட்சியில் எவ்வித திட்டப்பணிகளும் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: