குடிமராமத்து பணிகளில் முறைகேடு புகார் கிராம மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

சாயல்குடி, செப். 18:  எஸ்.தரைக்குடியில் கருவேல மரங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அகற்றாமல் உள்ளதோடு, குடிமராமத்து பணிகள் முறையாக நடக்கவில்லை என்று கோரி கிராமமக்கள், விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி பெரிய கண்மாய் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவற்றை அகற்றி கண்மாயினை தூர்வார வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து முதற்கட்டமாக கண்மாயிலுள்ள கருவேல மரங்களை வெட்டுவதற்கு வருவாய் துறையினர் விலை நிர்ணய மதிப்பீடு தயார் செய்து, கடந்த 2017ல் பிப்ரவரி மாதம் ஏலம் விட்டனர். ஆனால் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு போகக் கூடிய விறகுகளை ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக ஏலம் விடப்பட்டதாகவும், குறிப்பிட்ட காலக்கெடு வழங்கவில்லை எனவும் அப்போது புகார் எழுந்தது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், ஓராண்டு நிறைவடைந்தும் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது.

இரண்டாம் கட்டமாக ரூ.73.30 லட்சம் மதிப்பீட்டில் இக்கண்மாயில் பொதுப்பணி துறை சார்பில் குடிமராமத்து பணிகள் செய்ய நிர்வாக அனுமதி வழங்கியது, ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் பணி நிறைவடைய வில்லை. ஆனால் முதற்கட்ட பணி நிறைவடைந்து விட்டதாக கணக்கு காட்டி, பில் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் கண்மாயிலுள்ள கருவேல மரங்கள் அகற்றவில்லை. குடிமராமத்து பணிகளும் முறையாக நடக்கவில்லை. இந்த முறைகேடுகளால் மழை பெய்ய சில வாரங்கள் உள்ள நிலையில், மழை பெய்தால் கூட கண்மாயில் மழை தண்ணீரை பெருக்க முடியாது போகும் நிலை உள்ளது. விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதாக கூறி, ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும்கிராமமக்கள் எஸ்.தரைக்குடி, சாயல்குடி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர், சம்பவ இடத்திற்கு வருவாய்துறை, காவல்துறையினர் வந்தனர். இப்பிரச்னை பற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றுநடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதால், சமரசம் அடைந்த கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: