கல்லூரி முதல்வரை மாற்றக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாயல்குடி, செப் 18: முதுகுளத்தூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் அவ்வப்போது மாணவர்களுக்கிடையே சிறு, சிறு பிரச்னைகள் நடந்து வந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள், கடந்த 6ம் தேதி தமிழ்துறை வகுப்பறையில் கம்புகள் மற்றும் கற்குவியல்கள் வைத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் கல்லூரி முதல்வர் (பொ) விமலாவிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை கூறப்படுகிறது. இதனால்  வகுப்புகளை புறகணித்து விட்டு வெளியேறினர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு, கல்லூரி 13ம் தேதி திறக்கப்பட்டது. (பொ) முதல்வரை மாற்றவேண்டும், கல்லூரிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். நிரந்த விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி 14ம் தேதி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆனால் அரசு அதிகாரிகள், பல்கலை கழகம் கண்டுகொள்ளாததால் நேற்று மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கூறும்போது, கல்லூரிக்கு குடிநீர், போக்குவரத்து வசதி கிடையாது. நிரந்தர முதல்வர் இல்லாததால் மாணவர்களுக்கு இடையே சிலர் கோஷ்டிகளை உருவாக்கி பிரச்னைகள் ஏற்படுத்தி வருகின்றனர். தகுதியான நிரந்தர பேராசிரியர்கள் இல்லாததால் படிப்பு பாதிக்கப்படுகிறது, தேர்வுகளுக்கு தயாராக முடியவில்லை. இதனால் நிரந்தரமாக பேராசிரியர்கள், நிரந்தர முதல்வர், கல்லூரி அலுவலர்களை நியமிக்க வேண்டும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அரசு முன்வரவேண்டும்.இந்த அனைத்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் உயர்கல்வி துறை மண்டல இணை இயக்குனர் அம்பலவாணன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு நாட்களுக்குள் பொறுப்பு முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்ைத கைவிட்டனர்.

Related Stories: