குமிழி ஊராட்சியில் கிராம சபை கூட்ட முடிவை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செப்.18: காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், குமிழி ஊராட்சியில் இயங்கும் சலவை தொழிற்சாலையை மூடக்கோரி கிராமசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அமல்படுத்த கோரி காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆண்டனி தினகரன், பொதுச்செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சூரியா முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ராஜகுரு, ஏஐசிசிடியு மாநில துணைத்தலைவர் இரணியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குமிழி ஊராட்சியில் கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டம், மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டம் என இரண்டு கூட்டங்களிலும் குமிழி ஊராட்சியில் செயல்பட்டு வரும் சலவை தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகளைக் கூறி தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் தலித் மக்களின் குடியிருப்புகளை அகற்றிய அதே இடத்தில் மக்கள் குடியிருக்கும் வகையில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Related Stories: