சிவகாசி அருகே மீனம்பட்டியில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடை

சிவகாசி, செப். 7: சிவகாசி அருகே மீனம்பட்டியில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டி கிராமத்தில் நியாய விலை கடை உள்ளது. இக்கடையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல்கள் விழுந்தும், காரைகள் பெயர்ந்தும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் தான் அப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர்.

இதுகுறித்து மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆபத்தான நிலையில் உள்ள இந்த கடையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை கூறியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. உட்பகுதியில் உள்ள காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. உள்ளே இருக்கும் ஊழியர் மற்றும் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பொருட்கள் வாங்க வரும் எங்களுக்கும் ஆபத்து காத்திருக்கிறது. எனவே இங்கு செயல்பட்டு வரும் நியாய விலை கடையை வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும். இந்த கடையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: