கம்பம் பஸ் ஸ்டாண்டில் பிக்பாக்கெட் திருடர்கள் அட்டகாசம் போலீஸ் கண்காணிப்பு தீவிரமாகுமா?

கம்பம், செப்.7: கம்பம் பஸ் ஸ்டாண்டில் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை அதிகமாகிறது. இதனை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.தேனி மாவட்டம் கம்பம் தமிழக-கேரளா எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும். கேரளாவில் உள்ள கம்பம் மெட்டு, கட்டப்பனை, நெடுங்கண்டம், வண்டிப்பெரியார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களது பிள்ளைகளை தேனி மாவட்ட பள்ளிகளில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்க வைக்கின்றனர். இவர்கள் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பள்ளிக்கு சென்று பிள்ளைகளை பார்க்க வந்து செல்கின்றனர். மேலும் விடுமுறை தினம் என்பதால் வெளியூர்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களும் தங்களது முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய கம்பம் நகருக்கு வந்து செல்கின்றனர். இதனால் அன்றைய தினங்களில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அதிகளவு கூட்டம் காணப்படும்.

இதை சாதகமாக பயன்படுத்தி சில சமூக விரோதிகள் அவ்வப்போது பயணிகளை குறி வைத்து ஜேப்படி, செல்போன் திருட்டு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸார் பற்றாக்குறையின் காரணமாக அவ்வப்போது சிறு சிறு திருட்டுகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு சில நேரங்களில் வெளியூர் செல்வதற்காக காத்திருக்கும் பயணிகள் தாங்கள் வைத்துள்ள பணத்தை தொலைத்து விட்டு திண்டாடுகின்றனர். மேலும் குடிமகன்கள் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இருக்கையில் அரைகுறை ஆடையுடன் படுத்து புரளுகின்றனர். ஆகவே விடுமுறை மற்றும் முக்கிய விஷேச தினங்களில் கூடுதல் போலீசாரை நியமித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘கம்பம் புது பஸ் ஸ்டாண்டில் விடுமுறை நாட்களில் அதிக கூட்டத்தை பயன்படுத்தி அடிக்கடி பிக்பாக்கெட் நடக்கிறது. இதை தடுக்க போலீசார் ரோந்து வர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: