புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே டூவீலர்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம் அதிகரிப்பு

தேனி, செப்.7: தேனி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே கலெக்டர் அலுவலக திட்டச்சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

தேனி கர்னல் ஜான்பென்னிகுக் பெயரிலான புதிய பஸ் ஸ்டாண்டு பை-பாஸ் ரோட்டில் உள்ளது. இப்புதிய பஸ் நிலையத்தில் இருந்தே பல்வேறு ஊர்களுக்கும் அனைத்து வழித்தடங்களுக்கும் பயணிகள் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இப்புதிய பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் மிகுந்தே உள்ளது. இதன் வடக்கு பகுதியில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்வதற்கான திட்டச்சாலை உள்ளது. மிகக் குறுகிய திட்டச்சாலையில் பஸ் ஸ்டாண்டு எதிரே உணவு விடுதிகள் உள்ளன.

இவற்றின் முன்பாக சாலையோரத்தில் மோட்டார் சைக்கிள்களை பயணிகள் நிறுத்தி செல்கின்றனர். ஏற்கனவே, மிகக் குறுகியதாக உள்ள இச்சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றன. இதில் சில சமயங்களில் பஸ்கள் பாதசாரிகள், பயணிகளை உரசியபடியே செல்லும் அவலம் உள்ளது. இச்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் விபத்து அபாயத்தை தவிர்க்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோந்து வந்து, இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: