திகட்டாத தெள்ளமுது…தினை ரெசிப்பிகள் 4!

நன்றி குங்குமம் டாக்டர்

தினை சிறுதானியங்களில் முக்கியமானது. இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை நிறைந்திருக்கின்றன. தினை முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும். தினையில் இருக்கும் புரதமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது. தினை குறைந்த க்ளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ள உணவு. இது நார்ச்சத்து அதிகம் கொண்டது என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது. தினையில் சில சமையல் குறிப்புகளைப் பார்ப்போம்.

தினை இட்லி

தேவையானவை: தினை அரிசி - 4 கப், புழுங்கலரிசி - கால் கப், உளுந்து - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: தினையரசி, புழுங்கலரிசி இரண்டையும் சேர்த்தும், உளுந்தை தனியாகவும் 3 மணி நேரம் ஊறவிடவும். பின்னர், ஊறிய அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாகவே இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் உப்பு சேர்த்து கலந்து மாவை புளிக்க விடவும். மாவு புளித்ததும் இட்லியாக சுட்டெடுக்கவும்.

தினை தோசைக்கு. இதனுடன் அரை கப் பச்சரியையும் சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவு புளித்தபின் தோசையாக  வார்க்கலாம்.

தினைப் புட்டு

தேவையானவை: தினை மாவு - 2 கப், வெல்லத்தூள் - அரை கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி, வறுத்த முந்திரி துண்டுகள் - 1 தேக்கரண்டி, நெய் - தேவைக்கேற்ப

செய்முறை: சிறிதளவு நெய்விட்டு முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிது தண்ணீரை சூடுபடுத்தி உப்பு கலந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் தினைமாவை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி அதில் சூடு நீரை சிறிது சிறிதாக தெளித்து மாவு கட்டிப்படாமல் உதிரியாக பிசறி எடுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்து இட்லித் தட்டில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும். பின்னர், ஏலத்தூள், வறுத்த முந்திரி, வெல்லத்தூள் சேர்த்து கலந்து கிளறினால், தினைப்புட்டு தயார்.

தினை மாவு அடை

தேவையானவை: தினை மாவு - 2 கப், அரிசி மாவு - கால் கப், மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2, வெங்காயம் - 1, துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவைக்கேற்ப, மோர் - அரை கப்.

செய்முறை: மோரில் சிறிது தண்ணீர் கலந்து அதனுடன் தினைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேங்காய்த்துருவல், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவை 10 நிமிடம் ஊறிய பிறகு அடையாக வார்க்கவும். இதனுடன், கொத்துமல்லி சட்னி, சாம்பார், தக்காளி சட்னி சேர்த்து சாப்பிடலாம்.

தினை வெஜிடபிள் ரைஸ்

தேவையானவை: தினையரசி - 1 கப், கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி - 1 கப், இஞ்சித் துருவல் - 1 தேக்கரண்டி, சீரகம், மஞ்சள் பொடி, - அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப, மிளகாய்த் தூள், கறிமசால் பொடி - 1 தேக்கரண்டி, நெய், முந்திரி - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப, வெங்காயம் - 1.

 செய்முறை: பீன்ஸ், கேரட், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு வெங்காயம், நறுக்கிய காய்களை வதக்கிக் கொள்ளவும். சீரகம், மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர், மிளகாய்த்தூள், கறிமசால் பொடி சேர்த்து வதக்கவும். அதனுடன் தினையரிசியைச் சேர்த்து லேசாக வதக்கி, 1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவிடவும். வெந்தவுடன் இறக்கி, அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்த்து கிளறிவிடவும். சுவையான தினை ஃப்ரைட் ரைஸ் தயார்.

Related Stories: