சைனசைடிஸ் (Sinusitis) பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள்

நன்றி குங்குமம் தோழி

சுமார் மூன்று வருடங்களுக்கு முன் என்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்மணி ஒருவர், “கடந்த ஆறு மாதங்களாக ஏறக்குறைய ஒவ்வொரு நாளும்  தனது தலை கனமாக இருப்பதாகவும் தலை வலிப்பதாகவும் அதனால் தனது கடமைகளை சரிவர செய்ய முடியவில்லை என்றும் இதனால் வீட்டிலும் அலுவலகத்திலும் பல குழப்பங்கள்” என்று தனது உடல் உபாதையை / மன வருத்தத்தை என்னிடம் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இது வேலை நிமித்தமாகவோ அல்லது மன அழுத்தம் காரணமாகவோ இருக்கும் என்று நினைத்தாலும் அது அவ்வப்போது தீவிர தலைவலியாகவும் இரவில் மூக்கில் அடைப்பு ஏற்படக்கூடியதாகவும் சில நேரங்களில் மூக்கின் வழியாக சளியாகவும் காய்ச்சலாகவும் மாறியதாலும் மற்றும் சாதாரண சளி ஜலதோஷம் மருந்துகளுக்கு இப்பிரச்சனை குணம் அடையாமல் போனதாலும் என்னிடம் அணுகினார்.

இதை நான் நன்றாக பரிசோதித்த பிறகு இது சைனசைடிஸ் சார்ந்த தலைவலி என்று அவர்களுக்கு  விளக்கி, சில பிரசித்தி பெற்ற ஆயுர்வேத சிகிச்சை முறைகளை கையாண்டு அதற்கு கூடவே சில உள் மருந்துகள் கொடுத்து வர பதினைந்து நாட்களிலேயே நல்ல பலன் தெரிந்தது. மேலும் ஒரு இரண்டு மாதங்கள் இம்மருந்துகளை சாப்பிட அறிவுறுத்தியதில், அவர்களும் நான் கூறியபடியே பத்தியங்கள் இருந்து அம் மருந்துகளை உட்கொண்டு வர அவர்களது இந்த சைனசைடிஸ் பிரச்சனை முழுவதுமாக குணமடைந்து விட்டது. மூன்று வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு இந்த பிரச்சனை மீண்டும் வரவே இல்லை.

அந்த பெண்மணிக்கு இந்த சைனஸ் பிரச்சனை வந்ததற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய அலர்ஜியோ அல்லது நோய் தொற்றோ இல்லை. அவர்களுக்கு இந்த நோய் வந்ததற்கான முக்கிய காரணம் அசிடிட்டி தான். ஆம். அசிடிட்டியினால் கூட சைனஸ் பிரச்சனை வரக்கூடும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? நீங்கள் வாழ்நாள் முழுவதும் வலி நிவாரணிகளும் ஆன்டிபயாட்டிக்சும் சாப்பிட்டு வர அசிடிட்டி அதிகமாகி சைனஸ் பிரச்சனை அதிகமாகுமே தவிர இது நிரந்தரமாக குணமடையாமல் நாளுக்கு நாள் வீரியமடைந்து உங்கள் தினசரி செயல்களையே முடக்கிவிடும். ஆக, சைனஸ் ஒரு ஆட்கொல்லி நோயாக பல நேரங்களில் மாறாமல் இருந்தாலும் கூட அது நம் மன தைரியத்தையும் உடலமைப்பையும் மாற்றி, நம்மை சோர்வடையச் செய்யும் ஒரு முக்கியமான நோயாக பார்க்கப்படுகிறது.

லட்சத்தில் ஒருவருக்கு இந்நோய் பூஞ்சான் காரணமாக உருவாகி இருந்தால் அது மூளை வரை பரவி நம் கண், காது ஆகியவற்றின் செயல்பாடுகளை குறைத்து பக்கவாதம் வரை உருவாக்க வாய்ப்புகள் உண்டு. எனவே இப் பிரச்சனையை உடனுக்குடன் சரி செய்து கொள்வது நல்லது.அடிப்படையில் சைனஸ் என்பது ஒரு வியாதி அல்ல. அது நமது தலையில் இருக்கும் ஒரு அங்கம் ஆகும். இது முக எலும்புகளுக்குள் சில துவாரங்களாகும் ( வெற்று இடங்கள்).

இவை நம் மூக்குடன்  இணைக்கப்பட்டுள்ளன. நமது உடலில் நான்கு வகையான சைனஸ் மண்டலங்கள் உள்ளன, அவைகளில் காற்று மூக்கின் வழியே புகுந்து நம் தலையை நம் கழுத்தின் மீது மிதக்க செய்து நமது தலையின் பாரம் நமக்கு தெரியாத அளவிற்கு பார்த்துக் கொள்கிறது, மேலும் நாம் பேசுவதற்கு ஒலி அதிர்வுகளை ஏற்படுத்த உதவுகிறது.

சில சமயங்களில் சில ஒவ்வாமைகளின் காரணமாகவோ அல்லது நோய்த்தொற்று காரணமாகவோ பல நேரங்களில் நீண்ட காலமாக இருக்கும் அசிடிட்டியின் காரணமாகவோ நமது சைனஸ் மண்டலத்தின் உள்ளிருக்கும் திசுக்கள் வீக்கம் அடைந்து அதனால் தலைபாரம், தலைவலி, மூக்கடைப்பு மற்றும் சளி தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புண்டுசைனஸ் மண்டலத்தினுள் பாக்டீரியா வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதாலோ அல்லது புகை பிடித்தல் மற்றும் மாசுபட்ட காற்றை சுவாசித்தல் ஆகியவையினால் ஏற்படும் அலர்ஜியினாலோஅல்லது அசிடிட்டியால் நம் வயிற்றின் அமிலங்களின் நெடிகள் மேல் நோக்கிச் செல்வதாலோ சைனஸ் உள்ளிருக்கும் திசுக்கள் சேதமடைந்து ‘சைனசைடிஸ்’ பிரச்சனையை உருவாக்கலாம். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் நாளடைவில் இது நுரையீரலுக்குள் சென்று இருமல், மூச்சுக் குழாய் அழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி இது ஆஸ்துமாவாக கூட மாற வழிவகுக்கும்.

காது மூக்கு மற்றும் தொண்டை ஆகிய மூன்று அங்கங்களும் ஒன்றோடு மற்றொன்று இணைந்திருப்பதால் இந்த மூக்கில் ஏற்படும் சைனசைடிஸ் பிரச்சனையால் மற்ற உறுப்புகளும் பாதிக்க நேரிடும். காதிற்குள் இந்த நோய் தொற்று சென்று சிலருக்கு நிரந்தரமாக காது கேளாமை பிரச்சனை உட்பட பல பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புண்டு.

சைனசைடிஸின் அறிகுறிகள்

*தலைவலி - லேசானது முதல் தீவிரமான, கனத்துடன் கூடிய தலைவலி. (கீழே குனிந்தால் தலைக்குள் தண்ணீர் ஓடுவது போல் உணர்தல்) - சமயங்களில் ஒற்றைத் தலைவலியாக வருதல்.

*வலி - கண், காது, மேல் தாடை, தொண்டை மற்றும் பற்களில் வலி.

*கெட்ட சுவாசம் - துர்நாற்றம் வீசும் மூச்சு

*மூக்கடைப்பு - ஒன்று அல்லது இரண்டு நாசியின் அடைப்பு காரணமாக சுவாசிப்பதில் சிரமம்

*இருமல், குறிப்பாக இரவு நேரங்களில் இருமல்.

*மூக்கடைப்பு, காது அடைப்பு, வாசனை இழப்பு.

*கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி வீக்கம்

*சோர்வு, காய்ச்சல்

*சளி - வெண்மையான சில சமயங்களில் மஞ்சள் நிறமான அடர்த்தியான சளி.

சைனசைடிசின் ஆயுர்வேத கண்ணோட்டம்

ஆயுர்வேதத்தில், சைனசைடிஸ் ‘துஷ்ட பிரதிஷ்யயம்’ என்றும் ‘பீனசம்’ என்றும் அழைக்கப்படுகிறது, இது கப வியாதியாக வருகிறது. இது தீவிரமடைந்து, முக்கியமாக சுவாசக் குழாயில் இருக்கும் பிராண வாதத்தை பாதிக்கிறது.சைனசைடிஸ் சிகிச்சைக்கான ஆயுர்வேத அணுகுமுறை பன்முகத்தன்மை கொண்டது. இது பஞ்சகர்மா, வாய்வழி மருந்துகள், உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஒரு கூட்டு நச்சுத்தன்மை நீக்கும்  செயல் முறைகளாக கையாளப்படுகிறது. நசியம், லேபனம், தலம், வமனம், விரேசனம், சிரோதாரை, தூமபானம் போன்ற சிகிச்சைகள் பொதுவாக வியாதியின் தீவிரத்தைப் பொறுத்து நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

‘நஸ்ய கர்மா’ அல்லது ‘நசியம்’ என்பது ஒரு தனித்துவமான மற்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து நச்சு நீக்கும் சிகிச்சைகளில் ஒன்றாகும், இது சைனசைடிஸ் சிகிச்சையில் மிகவும் வெற்றி தருவதாக இருக்கிறது. நசிய சிகிச்சையில் மூலிகைகள், எண்ணெய்கள் மற்றும் மூலிகைப் பொடிகளை மூக்கின் வழியாக செலுத்தி சளி சுரப்பதைத் தூண்டி சைனஸ் உள்ளிருக்கும் சளியைக் கரைக்கவும் தளர்த்தவும் உதவி அங்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நசிய பிரயோகத்திற்கு சட்பிந்து தைலம், திரிகடு சூரணம், நசிகா சூரணம்  ஆகியவை பயன்படுத்தலாம்.

உடம்பிலிருந்து கபத்தை நீக்க பேதி மருத்துவமான விரேசனம் நன்றாக பயன்படும்.

தூம முறை

விரலி மஞ்சள் ஒரு துண்டு எடுத்துக்கொண்டு அதை நல்லெண்ணெய் அல்லது நெய் தீபத்தில் சுட்டு பின்னர் அதிலிருந்து வரும் புகையை மூக்கின் வழியே இழுக்க வேண்டும் அல்லது சிறிய அளவு மஞ்சள் தூள் (இரண்டு சிட்டிகைகள் அல்லது ¼ டீஸ்பூன்) சூடாக இருக்கும் அடுப்பு கரி மீது வைத்து அதன் புகை மூக்கின் வழியே உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு செய்ய சைனஸில் ஏற்படும் மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலிக்கு ஒரு அவசரகால தற்கால தீர்வாக அமையும்.

ஆயுர்வேதத்தில் உள்ளுக்குக்கொடுக்க கஷாயங்களான தசமூல கட்டுத்ராயம், வியாக்ரியாதி, வாரணாதி, குக்குலுதிக்தகம், பத்தியாக்க்ஷ தாத்திரியாதி, பத்தியா குஸ்தும்பராதி, இந்து காந்தம் ஆகியவை நோயாளியின் தன்மைக்கேற்ப திரிகடு, சுதர்சனம் ஆகிய சூரணங்களுடன் சேர்த்து கொடுக்க நல்ல பலன் தரும்.

வாயில் அடக்கிக் கொள்ள தாளிசாதி வடகமும் வியோஷாதி வடகமும் பயன்படுத்த மூக்கில் ஏற்படும் மூக்கடைப்பு மற்றும் சளி தொந்தரவுகள் குறைந்து இந்த சைனஸ் பிரச்சனை குறைவதை நாம்

காணலாம்.

மேலும் சுதர்சன மாத்திரை, குக்குலுபஞ்சபல மாத்திரை, சூர்யாவர்த்த மாத்திரை ஆகியவையும் அரிஷ்டங்களான வாசரிஷ்டம், கணக்காசவம் அமிர்தாரிஷ்டம் ஆகியவை வியாதியின் குறிக்குணங்களுக்கேற்ப கொடுக்க கபம் குறைந்து மூக்கு துவாரங்கள் விரிவடைந்து இந்த பிரச்சனைகளின் அறிகுறிகள் நன்றாக குறைவதை நாம் காணலாம்.

நோயின் தீவிரத் தன்மை குறைந்து வலிகள் குறைந்து வரும் தருவாயில் காயகற்ப மருந்துகளான அகஸ்திய ரசாயனம், தசமூல ரசாயனம், சித்ரகஹரீதகி லேகியம், இந்துகாந்த கிருதம், கண்டகாரி கிருதம், குக்குலுதிக்தாக கிருதம் ஆகியவை கொடுத்து வர இந்த நோய் முற்றிலுமாக குணமடைந்து பின் நாட்களில் அவர்களுக்கு இந்த நோய் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள பெரிதும் உதவும்.

வெளி பூச்சுகளாக ராஸ்னாதி சூரண பற்று, திரிகடுகு சூரண பற்று ஆகியவை கொடுக்க நல்ல பலன் தரும்.

சைனசைடிஸைத் தடுப்பதற்கான வாழ்க்கை முறை மாற்றங்கள்

*தேவையில்லாமல் அடிக்கடி உங்கள் மூக்கை சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். கிருமிகள் மற்றும் தொற்றுநோயைத் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும்.

*புகைபிடிப்பதை தவிர்க்கவும்

*குளிர் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படும் போது முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும்.

*எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் முகமூடிகளை அணிவதன் மூலம் தூசி, புகை, மாசு, எரிச்சல் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். தூசி மற்றும் மகரந்த ஒவ்வாமை உள்ளவர்கள் தேவையான சமயங்களில் முகமூடி அணிய வேண்டும்.

*பல் நோய்த்தொற்றுகள் மற்றும் வலிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்.

*மழை, பனி, தூசி, புகை ஆகியவற்றில் உங்களை வெளிப்படுத்தாதீர்கள், சிகைக்காய் பொடியைப் பயன்படுத்தாதீர்கள், அடிக்கடி எண்ணெய் குளியலை தவிர்க்கவும்.

*மின்விசிறியின் கீழ் நேரடியாக தூங்குவதைத் தவிர்க்கவும். ஏசி ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 24 முதல் 29C வெப்பநிலையில் ஏசியைப் பயன்படுத்தலாம்.

*செல்லப்பிராணிகளின் முடிகள் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும், எனவே அவற்றை விலக்கி வைக்கவும்.

*வீட்டைச் சுத்தம் செய்தல்/தூசி அடித்தல், கொசுவர்த்திச் சுருள்கள்/லிக்யூடேட்டர்கள் புகை/அகர்பத்தி புகை போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

*ஆஸ்பிரின், சல்பைடுகள், என்சாய்ட்ஸ் (NSAIDS), டார்ட்ராசைன் (tartrazine) பூசப்பட்ட மாத்திரைகள் தவிர்க்க வேண்டும்.

*இரவு உணவை இரவு எட்டு மணிக்கு முன்பே எடுத்துக்கொள்ள வேண்டும்.

*குளிர் காலநிலையில் தலை, காது மூடும்படியாக ஸ்கார்ஃப் அணிவது நல்லது.

*சரியான வழிகாட்டுதலுடன் பிராணாயாமம் செய்யலாம்.

*மருத்துவரின் ஆலோசனைப்படி நீராவி செய்யலாம்.

உணவு முறைகள்

*குடிக்க வெந்நீரை மட்டும் பயன்படுத்தவும்.

*மிளகாய்க்குப் பதிலாக, உங்கள் உணவில் முடிந்தவரை மிளகு பயன்படுத்தப்பட வேண்டும்.

*சிவப்பு அரிசி, குதிரைவாலி, கோதுமை, பார்லி, தேன், பருப்புகீரை, பூண்டு, பேரீச்சம்பழம், ஏலக்காய்  ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

*பூண்டு, மிளகு, சீரகம், பெருங்காயம், சோம்பு, இலவங்கப்பட்டை, கொத்தமல்லி,  கிராம்பு, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை உங்கள் உணவில் அடிக்கடி சேர்க்கவும்.

*மஞ்சள் மற்றும் உலர்ந்த இஞ்சி (சுக்கு), மிளகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இவை நல்ல இயற்கையான அழற்சி எதிர்ப்பு உணவுகள்.

மேல் கூறிய அனைத்து வழிமுறைகளையும் நாம் செய்து வர சைனசைடிஸ் நோய் அறவே நீங்கி முற்றிலுமாக குணமடைந்து பின்னர் வாழ்நாள் முழுவதும் வராமல் பார்த்துக் கொள்ள

பெரிதும் உதவும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தொகுப்பு : உஷா நாராயணன்

Related Stories: