தெலுங்கானாவில் கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பேராசிரியரை தாக்கிய மாணவர்கள்

கரீம் நகர்: தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பேராசிரியரை மாணவர்கள் அடித்து துவைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தெலுங்கானாவில் தேர்வறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி உதவி பேராசிரியரை மாணவர்கள் துரத்தி சென்றுப்  பிடித்து சரமாரியாக தாக்கினர். தெலுங்கானாவில் கரீம் நகர் மாவட்டத்தில் திம்மாபூரில் ஸ்ரீ சைதன்யா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரியில் நேற்று துணைத் தேர்வுகள் நடைபெற்றுள்ளது. அப்போது கல்லூரி ஆய்வகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் வெங்கடேஷ் என்பவர் மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அந்த மாணவி தன்னுடன் பயிலும் சக மாணவியிடம் தமக்கு நேர்ந்ததை கூறியுள்ளார். இந்த சம்பவத்தை எப்படியோ அறிந்து கொண்ட வெங்கடேஷ் கல்லூரியில் இருந்து தப்பி செல்ல எண்ணி ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வெங்கடேஷை விரட்டி பிடித்தனர். பின்னர் சரமாரியாக அவரை தாக்கினர். இதை அடுத்து உதவி பேராசிரியர் வெங்கடேஷுக்கு எதிராக கல்லூரி நிர்வாகத்திடமும் மற்றும் காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கரீம் நகர் போலீசார் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: