தாயின் கடிதத்தை ஏற்று நீதிபதிகள் நடவடிக்கை பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை:  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதி கே.கே.சசிதரனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘‘என் கணவர் இறந்து விட்டார். எனது மகள் குடும்ப சூழல் கருதி திருபுவனம் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார். ஜவுளி கடைக்காரரின் நண்பர் ஒருவர், என் மகளை தீபாவளியன்று கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அன்று மதியம் மயக்க நிலையில் வீடு திரும்பிய என் மகளுக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது, என் மகள் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தோம். ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பலருக்கும் தொடர்பு உள்ளது. ஆனால் போலீசார் வேறு யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மகளின் பாதிப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த கடிதத்தையே பொதுநல மனுவாக நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர்.

இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் ஆஜராகி, நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தார். அப்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது தாய் ஆகியோர் நீதிபதிகள் முன் ஆஜராகி, கண்ணீர் மல்க ஒரு கடிதத்தை அளித்தனர். அதில், ‘இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கூறியிருந்தனர். இருவரிடமும், நீதிபதிகள் தனியாக விசாரித்தனர். பின்னர், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜன. 30க்குள் ரூ.2 லட்சம் இழப்பீட்டை கலெக்டர் வழங்க வேண்டும். அவருக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன. 31க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: