வடக்குகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகரம்!: பாதாள சாக்கடை தூர்வாருதல், பராமரிப்பு பணிகள் மும்முரம்..!!

சென்னை: சென்னை மாநகரில் மாஸ் டெசில்டிங் திட்டத்தை சென்னை பெருநகர குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் செயல்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை மழைநீர் தேங்குவதும், பாதாள சாக்கடை அடைப்பினால் கழிவுநீர் வெளியேறி தேங்குவதும் தான். 
ஆனால் வரும் அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் இவற்றை தவிர்க்க தற்பொதே முன்னெச்சரிக்கை பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. சுமார் 400 சதுர கிலோ மீட்டர் பரபரப்பு கொண்ட சென்னை மாநகராட்சியில் 1800 கிலோ மீட்டர் நீள பாதாள சாக்கடை கட்டமைப்புகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. 
வடக்குகிழக்கு பருவமழை காலத்தின் போது பாதாள சாக்கடை தடத்தில் அடைப்பு ஏற்படாமல் தவிர்க்க கடந்த காலங்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கிய இடங்கள், அதிக புகார்கள் வந்த பகுதிகள் மற்றும் தண்ணீர் புகுந்த குடிசை பகுதிகள் என 800 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் தொடர்ச்சியாக 10 நாட்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 258 தூர்வாரும் இயந்திரங்கள், 142 ஜெட் இயந்திரங்களை கொண்டு தற்போது பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கழிவுநீர் தேங்குதல், பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னைகள் இருக்காது. 
சென்னை பெருநகர குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் செயல்படுத்தும் இத்திட்டத்தின் படி, கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் குழாய்களில் கசடுகள் அகற்றப்படுவதோடு இதர பராமரிப்பு பணிகளும் சேர்த்தே முடிக்கப்படுகின்றன. மனிதர்கள் பாதாள சாக்கடைக்குள் இறக்கி சுத்தம் செய்வதை தவிர்த்து முழுமையாக இயந்திரங்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
வடக்குகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 3 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் முன்கூட்டியே தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவது நல்ல பலனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  2015ல் ஏற்பட்டது போன்ற பெருவெள்ள பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க தூர்வாருவதுடன் நிற்காமல் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சென்னை மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

The post வடக்குகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகரம்!: பாதாள சாக்கடை தூர்வாருதல், பராமரிப்பு பணிகள் மும்முரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: