நாமக்கல், ஆக.20: தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் மூத்த முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கும் ஆன்லைன் கலந்தாய்வு, கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இதில் மாநிலம் முழுவதும், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 737 தலைமை ஆசிரியர் பணியிடம், அந்தந்த மாவட்ட வாரியாக ஒளிவு மறைவின்றி ஆன்லைனில் காட்டப்பட்டது. நேற்று மாலை வரை, 600 பேருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் அளிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வில், 16 முதுகலை ஆசிரியர்கள், இரண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களில் 16 பேர் மாவட்டத்தில் உள்ள காலியாக உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்தனர். 2 முதுகலை ஆசிரியர்கள் வெளி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து பதவி உயர்வு பெற்றனர். கலந்தாய்வில் பங்கேற்ற 8 முதுகலை ஆசிரியர்கள், பதவி உயர்வு வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு, தொடர்ந்து முதுகலை ஆசிரியராக பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் தேர்வு செய்துள்ள பள்ளிகளின் விபரம் வருமாறு: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக (உயர்நிலைகல்வி) பணியாற்றி வரும் கந்தசாமி, எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பூவராகவன்- ஏழூர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், ஆர்.புதுப்பட்டி குணசேகரன்- ராசிபுரம் அண்ணாசாலைக்கும், சிங்களாந்தபுரம் சத்தியவதி- நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் பள்ளிக்கும், வெண்ணந்தூர் நடராஜன்- அதே பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றனர். இவர்களுக்கு பதவி உயர்வுக்கான உத்தரவை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழங்கி, உடனடியாக புதிய பணியிடத்தில் சேரும்படி அறிவுறுத்தினார். கலந்தாய்வில் பங்கேற்ற பெரும்பாலான ஆசிரியர்களுக்கு விரும்பிய பள்ளிகள் கிடைத்தது. ஒரு ஆசிரியர் தற்போது பணிபுரிந்து வரும் பள்ளியிலேயே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கொல்லிமலையில் பணியாற்றி வரும் ஆசிரியருக்கும் விரும்பிய பள்ளி கிடைத்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post மேல்நிலைப்பள்ளி எச்.எம்.,களாக 18 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.