மன அமைதி தேடி வரும் நபர்களுக்கு தமிழ்நாடு அடைக்கலமாக உள்ளது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: மன அமைதி தேடி வரும் நபர்களுக்கு தமிழ்நாடு அடைக்கலமாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஜெயின் மத குரு ஆச்சார்ய ஸ்ரீமஹாஸ்ரமண் நல்லெண்ணம், நன்நெறி, போதை விடுவிப்பு ஆகிய அகிம்சை கொள்கைகளை பொதுமக்களுக்கு போதிக்கும் வகையில் ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு மாநிலமாக சீடர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மாதவரம் தட்டான்குளம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில்  சதுர்மாஸ் பிரவாஸ் விழாவில் ஜெயின் மத குரு ஆச்சார்ய ஸ்ரீமஹாஸ்ரமணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்தியா ஒரு திருக்கோயில் என்றால், அதில் இறைவன் உறைந்திருக்கும் கருவறைதான் ‘தமிழ்நாடு’. மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி, ‘தமிழ்நாடு’. பக்தியும் அறமும் தழைத்து விளையும் புண்ணிய பூமி, ‘தமிழ்நாடு’. பல்வேறு இடங்களில் இருந்து, ஞானிகளும், மகான்களும், குருமார்களும், ஆன்மிகத் தேடலுக்காகவும், அமைதிக்காகவும் தமிழ்நாட்டுக்கு வருகை தருவது என்பது தொன்று தொட்டு நடைபெற்று வரும் சிறப்பாகும்.

மகான்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு, அவர்களுடைய அறவழியில் நடந்தால், தனிமனிதனுக்கு துன்பமோ, நாட்டுக்கு குழப்பமோ, ஏற்பட வாய்ப்பில்லை. வெளிநாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளில் மக்களின் புறவாழ்க்கை ஆடம்பரமாகவும், இயந்திரத்தனமாகவும் இருக்கின்றது. ஆனால், அகவாழ்க்கை போராட்டம் மிக்கதாகவும், அமைதியற்றதாகவும் இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். காரணம், அங்கே அமைதியாக வாழ வழிசொல்லும் மகான்களும், குருமார்களும் அதிகமாக தோன்றுவதில்லை. அதனால்தான், அந்நாட்டு மக்கள்  மன இறுக்கத்தால் துயரம் அடைகிறார்கள். ஆகவே, அவர்கள் மனஅமைதிக்காக ஞானிகளையும் மகான்களையும் குருமார்களையும் தேடி இந்தியாவிற்கு வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடுதான் அவர்களுக்கு சரணாலயமாக திகழ்கிறது. தமிழ்நாடுதான் அடைக்கலம் கொடுத்து அவர்களை அமைதிப்படுத்தி மகிழ்விக்கிறது.

சென்னையில், புயல், வெள்ளம் வந்த காலங்களில் ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஓடோடி வந்து உதவி செய்ததை என் கண்களால் பார்க்க முடிந்தது. அப்படிப்பட்ட ஜெயின் சமுதாய மக்களுக்கு எனது உணர்வுபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயின் சமுதாய மக்களுக்கு என்றென்றும் அன்புடையவராக இருப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மது அருந்த மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

மின்சாரம் தடையால் பரபரப்பு

முதல்வர் பேசி முடிக்கும் தருவாயில் திடீெரன்று மின்சாரம் தடைப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பழுது சரி செய்ய முற்பட்ட போது, மீண்டும் மின்சாரம் வந்தது. இதனால், சில விநாடிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: