கல்லூரி மாணவி இறப்பு விவகாரம் போலி பயிற்சியாளரை 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

கோவை:  கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்துள்ள நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில், கடந்த 12ம் தேதி என்.எஸ்.எஸ். சார்பில் தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடந்தது. சென்னை மாம்பாக்கத்தில் வசித்த ஆறுமுகம் என்பவர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில், மாடியில் இருந்து குதித்து உயிர் பிழைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக 2-வது மாடியில் இருந்து கீழே லோகேஸ்வரி(19) என்ற மாணவியை பயிற்சியாளர் தள்ளிவிட்டார். அப்போது, முதலாவது மாடி சன்ஷேடில் கழுத்து பகுதியில் பலத்தகாயம் அடைந்து இறந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக, ஆறுமுகத்தை ஆலாந்துறை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

போலீசார் விசாரணையில், ஆறுமுகம் போலி சான்றிதழ் பெற்று 7 ஆண்டுகளாக 1500 பயிற்சி அளித்து வந்துள்ளார் என்பதும், இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்ததும் தெரியவந்தது. இதனால், அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (ஜே.எம்.6) போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி கண்ணன் அனுமதி வழங்கியும், வரும் 21ம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆறுமுகத்தை ஆலாந்துறை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: