போதை பாக்கு மொத்த சப்ளையர்களை பிடிக்க உத்தரவு

 

கோவை, ஜன.28: கோவை நகர், புறநகரில் புகையிலை பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. நகரில் குறிப்பிட்ட சில வணிக பகுதிகளில் குடோன்களில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்களை பதுக்கி வைப்பதும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடைகளுக்கு சப்ளை செய்வதும் நடக்கிறது. தினமும் நகர், புறநகரில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் விற்பனையாகி வருகிறது. ஏரியாவிற்கு ஏற்ப சிலர் குடோன்களை அமைத்து அங்கேயிருந்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகையிலை பொருட்களை இரு மடங்கு விலைக்கு விற்றாலும் போட்டிப்போட்டு வாங்கி செல்கிறார்கள். ஏரியா வாரியாக போதை பாக்கு விற்கும் கடைகள் விவரங்கள், வியாபாரிகள் குறித்த தகவல்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் சேகரிக்கப்பட்டுள்ளது. கடைகளில் விற்பனை செய்யும் சில வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது நடக்கிறது.

3க்கும் மேற்பட்ட முறை அபராதம் விதிக்கப்பட்டும் தொடர்ந்து போதை பாக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது ‘புகையிலை சட்ட பிரிவில்’ கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. நகர், புறநகரில் 250க்கும் மேற்பட்ட டீலர்கள் போதை பாக்குகளை வெளி மாநிலத்தில் இருந்து கோவைக்கு கடத்தி வருகின்றனர். தினமும் 20 முதல் 25 டன் போதை பாக்குகள் சப்ளையாகிறது.

இந்த போதை பாக்குகளை கர்நாடக மாநில எல்லை, கேரள எல்லை பகுதி செக்போஸ்டில் தடுக்க வேண்டும். டீலர்களை தடுத்தால் கடைகளில் போதை பாக்குகள் விற்பனையை வெகுவாக தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். டீலர்களை பிடிக்க போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டீலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமாக சப்ளை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post போதை பாக்கு மொத்த சப்ளையர்களை பிடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: