ராசிபுரம், ஏப்.16: ராசிபுரம் அடுத்த போதமலைக்கு செல்ல, 34 கிலோ மீட்டர் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க, ராஜேஸ்குமார் எம்பி., முன்னிலையில் சென்னை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள போதமலை கிராமத்தில் கீழூர், மேலூர், கெடமலை, நடுக்காடு, தெக்காடு, காட்டுவளவு மலை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் கரடு முரடான பாதைகளில் நடந்து செல்லவேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளில் இந்த மலை கிராமத்திற்கு, இதுவரை சாலை வசதி அமைக்கப்படவில்லை. மலைகிராமத்தில் ஒரே ஒரு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. உடல்நலம் பாதித்தால், சிகிச்சைக்கு அடிவார பகுதிக்கு வர வேண்டும். இதனால் கர்ப்பிணிகளும், முதியவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தேங்கல்பாளையத்தில் சில குடியிருப்புகளை இவர்களுக்காக அரசு ஒதுக்கி கொடுத்திருந்தாலும், வாழ்வாதாரத்திற்காக இவர்கள் மலைக்கு தான் செல்லவேண்டும். அங்கு விவசாய தோட்டங்கள் இருக்கிறது. போதமலைக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என தொடர்ந்து இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், இதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்த பிறகு, போதமலைக்கு சாலை அமைப்பதற்கான முயற்சிகள் துரிதகதியில் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழ்நாடு அரசு சார்பில், பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டு போதமலை, கெடமலை கிராமங்களுக்கு சாலை அமைக்க உரிய அனுமதி பெறப்பட்டது. சாலை அமைக்க வனப்பகுதியில் மரங்களை வெட்ட வேண்டும் என்ற சூழல் உருவானது. இது தொடர்பாகவும், ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கான முயற்சியை, முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். இதையடுத்து போதமலைக்கு சாலை அமைக்க தடையில்லா சான்று, சமீபத்தில் தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய வனத்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது போதமலைக்கு உட்பட்ட மலை கிராமங்களான கீழூர் முதல் மேலூர் வரை, 34 கிலோ மீட்டர் தூரம் வனப்பரப்பில் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சாலை போதமலை, கீழூர், மேலூர் மலைகிராமங்களுக்கு வடுகத்தில் இருந்து 23.65 கிலோ மீட்டர் வனப்பரப்பிலும், ஆர்.புதுப்பட்டியில் இருந்து கெடமலை வரையில் 11.37 கிலோ மீட்டர் என மொத்தம் 34 கிலோமீட்டர் வனப்பரப்பில் அமைக்கப்படுகிறது. அங்கு மரங்களை வெட்டவும், அதற்கு மாற்றாக புதிய மரங்களை நடவும், வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு ₹2.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் சாலை அமைக்கும் திட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில், சாலை அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சாலை அமைக்க திட்ட மதிப்பீடு மேற்கொள்ள நேற்று, சென்னை ஊரக வளர்ச்சி இயக்கக தலைமை பொறியாளர் குற்றாலலிங்கம் நேரில் வந்து ஆய்வு செய்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., முன்னிலையில் திட்டமதிப்பீடு தயார் செய்யும் பணி குறித்து தலைமை பொறியாளர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். வடுகத்தில் இருந்து போதமலைக்கு செல்லும் பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், வெண்ணந்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் துரைசாமி, செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர்கள் பார்த்திபன், பாலசுப்ரமணியம், பிடிஓ.,க்கள் பிரபாகரன், நாகலிங்கம் கலந்து கொண்டனர்.
The post போதமலைக்கு 34 கி.மீ. சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிப்பு appeared first on Dinakaran.