புரதம் ரொம்ப முக்கியம்

புரதச்சத்து குறைபாடு அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நம் நாட்டில் வழக்கமாக உண்ணப்படும் உணவில் மாவுச்சத்தும், கொழுப்புச்சத்தும் அதிகமாக இருக்கிற நிலையில், ஒவ்வொரு உணவிலும் இருக்கவேண்டிய புரதத்தின் அளவுகள் பெரும்பாலும் உதாசீனம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும் 0.8 கிராம் புரதம் என்பது பரிந்துரைக்கப்படும் உணவுமுறை அளவாகும். போதுமான அளவு புரதச்சத்துள்ள உணவை உட்கொள்வது, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருக்குமாறு செய்வதால் அவ்வப்போது இடையிலே நொறுக்குத்தீனிகளை உட்கொள்வதற்கான விருப்பத்தையும், வாய்ப்பையும் அகற்றி விடுகிறது. நோய் எதிர்ப்புத்திறனை உயர்த்திக் கொள்வதுதான் கோவிட் தொற்று சூழலில் அத்தியாவசிய, அவசரத் தேவையாக இருக்கிறது. புரதச்சத்து குறைபாடுகள், வாழ்க்கை தரத்தில் பெரிய பாதிப்பை விளைவிக்கிறவாறு மோசமான தசை இயக்கத்தையும் மற்றும் குறைவான ஆற்றல் அளவுகளையும் நமது உடலில் ஏற்படுத்திவிடும். நோய் எதிர்ப்புத்திறனின் சிறப்பான செயல்பாட்டுக்கு ஆதரவளிக்க போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது முக்கியம். புரத உணவுகள் என்றவுடன் அசைவ உணவுகள் மட்டுமே நம் நினைவுக்கு வரும். அசைவம் எல்லோருக்கும், எல்லா நாட்களிலும் சாத்தியம் இல்லை. தாவரங்கள் சார்ந்த உணவுகளிலும் புரதங்கள் நிறைய உள்ளன. * சோயா தயாரிப்புகள் புரதத்தை அதிகமாக கொண்டிருக்கின்றன. உணவு பிரியர்களுக்கு டோஃபு ஒரு மிகச்சிறந்த உணவாக இருக்கும் இதை சாலட்கள், சாண்ட்விச்சுகள் மற்றும் சூப்-ஐ சேர்த்துக்கொள்வது மட்டுமன்றி பிரதான உணவின் ஒரு அங்கமாகக்கூட இதை இடம்பெற செய்யலாம். இதில் அதிக அளவிலுள்ள கால்சியமும், இரும்புச்சத்தும், பால் சார்ந்த தயாரிப்புகளுக்கும்கூட ஒரு மாற்று உணவாக இதனை ஆக்குகிறது.* அரை கப் பாதம் பருப்புகளில் ஏறக்குறைய 16.5 கிராம் புரதச்சத்து இருக்கிறது. தினசரி உணவின் ஒரு அங்கமாக அல்லது உலர் பழங்களோடு சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாக இதனை சேர்த்துக்கொள்ளலாம். குறைவான கலோரியுள்ள இது, ஆரோக்கியமான விருப்பத்தேர்வாகவும் இருக்கிறது. நீரில் ஊற வைக்கப்பட்ட பாதம் பருப்புகளை காலையில் எழுந்தபிறகு சாப்பிடுவது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கு உதவும். * வேக வைக்கப்பட்ட கொண்டைக்கடலை / சுண்டலை குழம்பு, கறி மற்றும் அரிசி சாதத்தில் பயன்படுத்தலாம். அரை கப் சுண்டலில் 7 கிராமுக்கும் அதிகமாக புரதம் அடங்கியிருக்கிறது. சுண்டலை வேக வைத்து எடுக்கிற கூழ்மத்தை, வெண்ணெய்க்கு ஒரு மாற்றுப்பொருளாக சாண்ட்விச்களில் பேஸ்ட்-ஆக பயன்படுத்தலாம். * இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நிலக்கடலை உதவுகிறது. பீனட் பட்டர் சான்விச், ஒரு முழுமையான புரத சிற்றுண்டியாக இருக்கிறது. சாலட்கள், குழம்புகள், அவல் போன்ற இந்திய காலை உணவின் ஒரு அங்கமாகவும் நிலக்கடலைகளை பயன்படுத்தலாம்.* அவரையினத்தைச் சேர்ந்த பொருட்களைக் கொண்டு செய்யப்படும் சூப்-ன் அதிகளவு இழைநார், வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் தாவர ஊட்டப்பொருட்கள் இருக்கின்றன.

The post புரதம் ரொம்ப முக்கியம் appeared first on Dinakaran.

Related Stories: