புதுக்கோட்டையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளுக்கு ஆனந்தமாக வந்த மாணவர்கள்

புதுக்கோட்டை, ஜூன்13: புதுக்கோட்டையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு ஆனந்தமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும் கோடை வெப்பம் அதிகரித்த நிலையில், முதலில் ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளின் 6 முதல் 12ம்வகுப்பு வரையிலான வகுப்புகள் நேற்று தொடங்கும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இதனையடுத்து நேற்று பள்ளிகள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு துண்டுகளை வழங்கியும், மலர்களைத் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பளித்தனர். கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளின் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கின. புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுக்கோடடை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா மாணவிகளுக்கு துண்டுகளை வழங்கி வரவேற்பளித்தார். ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் க. நைனாமுகமது மாணவர்கள் மீது மலர்களைத் தூவி வரவேற்பளித்தார். பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு ஆரத்தி வரவேற்பும் அளிக்கப்பட்டது.

The post புதுக்கோட்டையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளுக்கு ஆனந்தமாக வந்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: