புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் சங்க கோரிக்கை மாநாடு அடுத்த மாதம் நடக்கிறது

புதுக்கோட்டை, ஜூன்17: புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 24ம் தேதி கோரிக்கை மாநாட்டை நடத்த ஐக்கிய விவசாயிகள் சங்கங்கள் (விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு) முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமையா தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலர் இந்திரஜித், தேசியக் குழு உறுப்பினர் மாதவன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலர் சங்கர், இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் தனபதி, விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் ராமையன், பொன்னுசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டபோது, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

விவசாயிகளின் விளை பொருள் அனைத்துக்கும் ஆதார விலைச் சட்டம் கொண்டு வர வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். 13 மாதங்கள் நடைபெற்ற போராட்ட களத்தில் உயிரிழந்த 714 விவசாயிகள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 24ம் தேதி கோரிக்கை மாநாட்டை புதுக்கோட்டையில் நடத்த முடிவு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்தக் கோரிக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவை சந்தித்து அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

The post புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் சங்க கோரிக்கை மாநாடு அடுத்த மாதம் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: