நாமக்கல், பிப்.13: நாமக்கல் மாவட்டத்தில் 146 மையங்களில் பிளஸ்2 மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. மொத்தம் 12,927 மாணவ, மணவிகள் எழுதுகிறார்கள்.தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் துவங்குகிறது. பிளஸ்2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதியும், பிளஸ்1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ம் தேதியும் துவங்குகிறது. தேர்விற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுகாப்பு மைய பொறுப்பாளர்களாக, ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், ஒரு முதுகலை ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு 197 அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 17,411 மாணவ, மாணவிகள், பிளஸ் 2 பொதுத்தேர்வினை எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதுமாக 92 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மையங்களுக்கும் டாப்ஷீட் மற்றும் விடைத்தாள்கள், நாமக்கல் மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தந்த தேர்வு மையம் அமைந்துள்ள பள்ளிகளில், விடைத்தாளுடன் மாணவ, மாணவிகளின் முகப்பு பக்கங்கள் தைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, நேற்று துவங்கியது. இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் 146 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், வேளாண்மை, தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 16 பாடப்பிரிவுகளுக்கு செய்முறை தேர்வுகள், வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.
செய்முறை தேர்வு பணியில் 850 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளுக்கு அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களும் புறத்தேர்வாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நேற்று பல்வேறு மையங்களுக்கு நேரில் சென்று, தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டார். செய்முறை தேர்வினை நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 927 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.
அதே போல், நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு பிளஸ்1 அரசு பொதுத்தேர்வினை 18,455 மாணவ, மாணவிகள் எழுதுகிறர்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான செய்முறை தேர்வுகள், வரும் 19ம்தேதி துவங்குகிறது. இந்த தேர்வுகள் 23ம் தேதி முடிவடைகிறது.
The post பிளஸ்2 மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.