பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக ரயில் நிலையங்களில் பிரெய்லி வரைபடம்

சென்னை: சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களில் பார்வை குறைபாடுள்ள பயணிகள் மற்றவர்களின் உதவியில்லாமல் ரயில் நிலையத்திற்குள் விரும்பும் இடங்களுக்கு செல்லும் வகையில் பிரெய்லி வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை ரயில்வே கோட்டத்தில் முதல் முறையாக பார்வை குறைபாடுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில்  பிரெய்லி வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் ரோனால்ட் நிசான் நிறுவனமும், சென்னை  எழும்பூர் ரயில் நிலையத்தில் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனமும் அமைத்துள்ளன. இந்த வரைபட  வசதி பார்வை குறைபாடுள்ள பயணிகள் மற்றவர்களின் உதவியில்லாமல் தாங்களே  ரயில் நிலையத்திற்குள் தேவைப்படும் இடங்களுக்கு சென்று அதன் வசதிகளை  பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 3 அடி நீளம் 3 அடி உயரம் அளவு கொண்ட பிரெய்லி வரைபடத்தில்,  டிக்கெட் கவுன்டர்கள், நடைமேடைகள், நடைபாதைகள், ரயில்வே பாலங்கள், மற்றும் பல இடங்களை எளிதாக சென்றடையும் வழியை காட்டுகிறது. இந்த  பிரெய்லி வரைபடத்தில் ‘கியூ ஆர் கோடுகள்’ கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை  ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்து தகவல்களை ஒலிக்கச் செய்து, போக விரும்பும்  இடத்தின் வழியை தெரிந்து கொள்ளலாம். பார்வை குறைபாடு உடையவர்களுக்கு,  நடைமேடைகளை பாதுகாப்பான இடமாக மாற்ற நடைமேடைகளின் ஓரத்தில்  தொட்டு உணரும் படியான டைல்கள் பதிக்கப்பட்டுள்ளன. பார்வை குறைபாடுள்ள  பயணிகளின் பாதுகாப்புக்காக சென்னை கோட்டம் முழுக்க பாலங்களின்  படிக்கட்டுகளில் பிரெய்லி பொறிக்கபட்டுள்ள துருப்பிடிக்காத இரும்பிலான  கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பார்வையற்ற  பயனாளிகளுக்கு பிரெய்லி வரைபட பலகை சேவையை பின்வரும் காலங்களில் அரக்கோணம்,  காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில்  அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக ரயில் நிலையங்களில் பிரெய்லி வரைபடம் appeared first on Dinakaran.

Related Stories: