பார்த்தீனிய களைச்செடிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

 

திருச்சி: பார்த்தீனிய களைச் செடிகளை அகற்றும் முறை குறித்து திருச்சி வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார். பார்த்தீனியம் என்ற களைச்செடி 1950ம் ஆண்டுகளில் கோதுமை தானியங்கள் வாயிலாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இச்செடி தற்போது நாடு முழுவதும் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தரிசு நிலங்களில் பரவலாக காணப்படுகிறது. பார்த்தீனியம் விதை மூலம் பரவும் தன்மை கொண்டது. ஒரு செடியானது ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 500 விதைகள் வரை உற்பத்தி செய்யக் கூடியது. மழை மற்றும் பாசனநீர், மனித செயல்பாடுகள் வாயிலாகவும் இவை பரவும் தன்மை கொண்டவை. அலிலோபதி என்பது ரசாயன வெளியீட்டால் பிற செடிகளை வளர விடாமல் செய்யும் தன்மையை குறிக்கும்.

பார்த்தீனியம் செடிகளில் இந்த அலிலோபதி தன்மை நிறைந்து காணப்படுவதால் போட்டியின்றி விரைவாகவும், பரவலாகவும் வளரக் கூடியவை. இச்செடியினால் பலருக்கு தோல் நோய் மற்றும் சுவாசக் குழாய் நோய்கள் ஏற்படும். விளை நிலங்களில் இச்செடி பரவுவதால் பெரிய அளவில் மகசூல் இழப்பு ஏற்படும். பார்த்தீனியம் செடிகளை ஆட்களை கொண்டு கையுறை அணிந்து கைக்களையாக அகற்ற வேண்டும். தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படாதவாறு கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். ஆவாரை, அடர் ஆவரை, துத்தி, சாமந்தி ஆகிய செடிகளின் வகைளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். மெக்சிகன் வண்டுகளை அதிக எண்ணிக்கையில் சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விடவேண்டும். அட்ரஸின், 2,4-டி கிளைபோசேட் மற்றும் மெட்ரி பூசன் போன்ற களைக் கொல்லிகளை பயன்படுத்தியும் இவற்றை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

The post பார்த்தீனிய களைச்செடிகளை கட்டுப்படுத்தும் முறைகள் appeared first on Dinakaran.

Related Stories: