பல்லடத்தில் சிக்கிய கூலிப்படையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்த கோரிக்கை

 

பல்லடம்,ஜூன்23: பல்லடத்தில் கைது செய்யப்பட்ட கூலிப்படையின் பின்னணி குறித்து, கூடுதல் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல்லடம் அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த, கேரளாவை சேர்ந்த காசிம் (32),விபின்தாஸ் (33), திருப்பூரை சேர்ந்த நவீன்ஆனந்த்(33), செல்வகணபதி (30) ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். கேரளாவை சேர்ந்த தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் சபரி மற்றும் ஷியாம் ஆகியோர், பல்லடம் அருகில் பதுங்கி இருந்ததாகவும், இவர்களிடம், நான்கு பேரும் கூலிப் படையினராக வேலை பார்த்ததாகவும் போலீசார் கூறப்படுகிறது.

கடந்த, 18ம் தேதி, திருப்பூர் கே.பி.என்., நகரில், பிரபல ரவுடி தினேஷ் என்பவர், மற்றொரு ரவுடி கும்பலை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜேஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பல்லடத்தில் கைது செய்யப்பட்ட கூலிப்படையினர் நான்கு பேருக்கும், திருப்பூரில் கொலை செய்யப்பட்ட ரவுடி தினேஷின் கூட்டாளிகளுக்கும் தொடர்புள்ளதாக ஒரு தகவல் உள்ளது. எனவே தினேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் பழிவாங்கும் நோக்கத்துடன், கூலிப்படையினர் பல்லடத்தில் பதுங்கி இருந்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் பல்லடம் போலீசார் இதை மறுத்துள்ளனர்.

அருள்புரம், சின்னக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனியன் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.வீடுகளுக்கு மத்தியில், கூலிப்படையினர், பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள கூலிப்படையின் பின்னணி என்ன? எதற்காக இங்கு தங்கி இருந்தார்கள்? என்பது குறித்து விசாரிப்பதுடன், மாயமான சபரி மற்றும் ஷியாம் ஆகியோரை கைது செய்து, கூடுதல் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பல்லடத்தில் சிக்கிய கூலிப்படையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: