பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அதிரடி மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் நள்ளிரவில் கைது: 6ம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மும்பை: பணபரிவர்த்தனை மோசடி வழக்கில் மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை, அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் இவரிடம் 6ம் தேதி வரை விசாரணை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அனில் தேஷ்முக் (71) உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அதே காலகட்டத்தில் மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங், ஊர்க்காவல் படைக்கு திடீரென மாற்றப்பட்டார். அதிருப்தியடைந்த பரம்பீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். இதில், அப்போதைய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள பார்கள், ஓட்டல்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலித்து கொடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்ததாக கூறியிருந்தார்.இது குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அனில் தேஷ்முக் மீது சிபிஐ எப்.ஐ.ஆர்.பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து அனில் தேஷ்முக் கடந்த ஏப்ரல் மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். இதன் இடையே சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அனில் தேஷ்முக் மீது பணபரிவர்த்தனை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அனில் தேஷ்முக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை செய்தது. அனில் தேஷ்முக்கின் தனிச் செயலாளர் சஞ்சய் பாலாண்டே (51) மற்றும் தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே (45) ஆகியோரை கைது செய்தது. இந்த பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத் துறை தரப்பில் 5 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். மேலும், சம்மனை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்றம் அவரது மனுவை சமீபத்தில் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் தேஷ்முக் தனது வழக்கறிஞருடன் விசாரணைக்காக ஆஜரானார். தெற்கு மும்பை பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் காலை 11.40 மணியளவில் ஆஜரானார். டெல்லியில் இருந்து மும்பை வந்திருந்த அமலாக்கத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கும் மேலாக துருவி துருவி விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் நள்ளிரவு அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார். அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பு தெரிவித்ததாகவும், இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் முறையிட போவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. நேற்று அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஜே.ஜே. மருத்துவமனையில் அமலாலாகத் துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். மருத்துவ பரிசோனைக்கு பின்னர் அனில் தேஷ்முக் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 6ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்த போது வேலை நீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஷே மூலம் பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் இருந்து ரூ.4.70 கோடி வசூல் செய்ததாக அமலாக்கத் துறை கூறுகிறது. இதில் ரூ.4.18 கோடி டெல்லி முகவரியை கொண்ட போலி நிறுவனங்களின் பேரில் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக்கின் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி அறக்கட்டளை கணக்கில் நன்கொடை என்ற பெயரில் டெப்பாசிட் செய்யப்பட்டதாக அமலாக்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.* விசாரணைக்கு முன்பே விளக்க வீடியோ வெளியிட்ட தேஷ்முக்அமலாக்கத்துறையின் முன் ஆஜராவதற்கு முன்பாக அனில் தேஷ்முக் வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘எனக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து சம்மன் வந்துள்ளது. நான் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தவறான செய்திகள் பரப்புகின்றனர். ஒவ்வொரு சம்மனுக்கு பிறகும், எனது மனு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதை தெரிவித்துள்ளேன். நீதிமன்ற முடிவுகளுக்குப் பிறகு நேரில் ஆஜராக உள்ளதாக அமலாக்கத்துறையிடம் தெரிவித்தேன். என் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, என் ஊழியர்களும், என் குடும்பத்தினரும் அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். எனது வாக்குமூலங்களை சிபிஐயிடம் பதிவு செய்துள்ளேன். இன்று (நேற்று முன்தினம்) நான் அமலாக்கத்துறை முன் ஆஜராகிறேன். சில சுயநலவாதிகளால் என் மீது தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பணம் பறித்தல், கொலை போன்ற பல மோசடிகளில் ஈடுபட்ட நபர் (போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங்) இப்போது தேடப்படும் குற்றவாளியாக தலைமறைவாக உள்ளார்’ என்று ெதரிவித்துள்ளார்.கார் முதல்… கைது வரை…. துரத்திய சோதனை* மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் கார் நின்றிருந்தது, கடந்த பிப்ரவரி 25ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஆரம்பித்த வழக்கு, கிளைக்கதைகள் போல பல்வேறு திருப்பங்களையும் அதிர்ச்சிகளையும் தந்து கொண்டிருக்கிறது.மார்ச் 5: மேற்கண்ட காருக்கு உரிமையாளர் என கூறப்படும் தொழிலதிபர் மன்சூக் ஹிரன், மர்மமாக இறந்து கிடந்தார்.மார்ச் 13: இந்த இரண்டு வழக்குகளையும் இணைத்து என்ஐஏ விசாரித்து, உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஷேயை கைது செய்தது.மார்ச்17: வழக்கை சரியாக கையாலாததற்காக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் மாற்றப்பட்டார்.மார்ச் 20: பரம்பீர் சிங், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதந்தோறும் மும்பை பார், ரெஸ்டாரண்ட்களில் இருந்து ரூ.100 கோடி வசூலித்து கொடுக்க சொன்னதாக புகார் கூறியிருந்தார்.மார்ச் 21: இதன் அடிப்படையில், மலபார் ஹில் போலீசில் புகார் செய்தார்.ஏப்.5: விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஏப்.9: மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அனல் தேஷ்முக்கின் மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஏப்.21: அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.மே.11: சிபிஐ எப்ஐஆர் அடிப்படையில், அமலாக்கத்துறை பண பரிவர்த்தனை வழக்கை பதிவு செய்தது.அக்.29: அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாத அனில் தேஷ்முக், சம்மனை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட் நிராகரித்தது.* தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய பிறகு, அமலாக்கத்துறை முன்பு நேற்று முன்தினம் அவர் ஆஜரானார். 12 மணி நேர விசாரணைக்கு பிறகு தேஷ்முக் கைது செய்யப்பட்டார்….

The post பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அதிரடி மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் நள்ளிரவில் கைது: 6ம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: