நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை: பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருகிற 19ம் தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22ம் தேதி, வாக்கு எண்ணும் மையங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் எ.சுந்தரவல்லி முன்னிலை வகித்தார். இதில் காவல்துறை தலைமை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாகவும், மொபைல் பார்ட்டி, பறக்கும் படைகள், வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், தாம்பரம் காவல் ஆணையர் எம்.ரவி, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை: பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: