தேர்தல் பணி வாகனங்களுக்கு வாடகை தராததால் தலைமை செயலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி

 

புதுச்சேரி, ஆக. 23: புதுச்சேரியில் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்திய தனியார் வாகனங்களுக்கு வாடகை தராததால் நீதிமன்ற உத்தரவுப்படி தலைமை செயலகத்தில் உள்ள அலுவலக பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது தேர்தல் நடத்தும் அதிகாரி, நோடல் அதிகாரி, பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காண்காணிப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தனியார் டிராவல்ஸ் மூலம் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் டிராவல்ஸ் உரிமையாளர்கள் கோபாலகிருஷ்ணன், கண்ணன் ஆகியோர் தலைமையில் கார், பேருந்து உள்ளிட்ட 182 வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின், வாகனங்களுக்கான வாடகை கட்டணம் ரூ.1 கோடியே 38 லட்சம் வண்டி வாடகை கட்டணம் வழங்குமாறு உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்தனர். இந்நிலையில் ரூ. 76 லட்சம் மட்டும் அப்போது வழங்கினர். பாக்கி ரூ.68 லட்சத்தை பிறகு வழங்குவதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து பாக்கி தொகையை வழங்காததால் டிராவல்ஸ் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், கடந்த 2020ம் ஆண்டு புதுச்சேரி 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது தேர்தல் அலுவலர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகததால் பாக்கி தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தேர்தல் அதிகாரிகள் பணத்தை வழங்காததால் தேர்தல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் ஜப்திக்கான நோட்டீஸை ஒட்டினர். அதன் பின்னரும் டிராவல்ஸ் உரிமையாளர்களுக்கான பணத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வழங்காததால், கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள தலா 300 நாற்காலிகள், டேபிள்கள், ஏசிகள், கம்ப்யூட்டர்கள் மற்றும் 5 கார்கள் ஆகியவற்றை ஜப்தி செய்ய நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று நீதிமன்ற அமீனாக்கள் குணசேகரன், செல்வராஜி, வழக்கறிஞர் கன்னியப்பன் தலைமையில் நீதிமன்ற ஊழியர்கள் தலைமைச் செயலகத்திற்கு நேற்று காலை வந்து பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலைமை செயலர் சட்டத்துறை செயலர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தி பொருட்களை ஜப்தி செய்ய விடமால் தடுத்து நிறுத்தியதால் நீதிமன்ற ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். தலைமை செயலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தேர்தல் பணி வாகனங்களுக்கு வாடகை தராததால் தலைமை செயலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: