தேர்தலில் வெற்றி பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் நடிகை ரோஜா உதவியாளரை கொல்ல முயன்ற 3 பேர் கைது: தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள்

 

சென்னை, பிப்.5: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி பைபாஸ் சாலை பகுதியில் வசிப்பவர் கண்ணையா மகன் பிரதீஷ் (37). இவர் பிரபல நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் உதவியாளராக உள்ளார். கடந்த 2ம் தேதி காலை 6 மணிக்கு பிரதீஷ் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த 3 பேர் பிரீதிஷை இரும்பு ராடு மற்றும் இரும்பு பைப்பால் கொலை செய்யும் நோக்கத்தோடு சரமாரியாக தாக்கி உள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.

படுகாயம் அடைந்த பிரதீஷ் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பிரபல நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் உதவியாளராக பிரதீஷ் இருந்ததால் அவரின் அனைத்து நடவடிக்கைகளையும் இவர் திட்டமிட்டு திறம்பட செயல்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருத்தணி அடுத்த தாழவேடு பெட்ரோல் பங்க் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர் பைக்கை நிறுத்திவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளனர்.உடனடியாக போலீசார் இவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் இவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரியைச் சேர்ந்த நவீன் (31), சிரஞ்சீவி (24), பரசுராம் (39) என்பதும் ரோஜாவின் உதவியாளர் பிரதீஷை தாக்கியதும் தெரியவந்தது.

வரும் சட்டமன்ற தேர்தலில் ரோஜாவின் வெற்றியை பறிக்கும் நோக்கத்தோடு பிரதீஷை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியது அம்பலமானது. அவர்களிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் நவீன் ஆந்திர மாநிலம் தெலுங்கு தேசம் கட்சியில் நகரி ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார். நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நடிகை ரோஜா போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் ஆனதிலிருந்தே இரு கட்சியினருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 13.10.23 அன்று தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் முத்துகிருஷ்ணம நாயுடுவின் மகனும், நகரி தொகுதி பொறுப்பாளருமான பானுபிரகாஷ் என்பவர் ரோஜா பற்றி டிவியில் பேட்டி கொடுத்ததால் ரோஜாவுக்கு பிஏவாக இருக்கும் பிரதீஷ் மற்றும் ஒய்எஸ்ஆர் கட்சியினர் பானுபிரகாஷ் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

ரோஜாவின் உதவியாளராக இருக்கும் பிரதீஷ் உயிரோடு இருந்தால் வரும் தேர்தலில் ரோஜா மீண்டும் ஜெயித்து விடுவார் என்பதால் இவரை தீர்த்துக் கட்ட தெலுங்கு தேசம் கட்சியின் மண்டல இளைஞரணி தலைவர் சிட்டிபாபு தெரிவித்ததாகவும் இதனால் பிரதீஷை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டு பரசுராம் மற்றும் சிரஞ்சீவி, நவீன் ஆகிய 3 பேரும் பிரதீஷ் நடைபயிற்சிக்கு சென்ற போது தாக்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து திருத்தணி போலீசார் நவீன், பரசுராம், சிரஞ்சீவி ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தேர்தலில் வெற்றி பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் நடிகை ரோஜா உதவியாளரை கொல்ல முயன்ற 3 பேர் கைது: தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: