தீபாவளி சீட்டு நடத்தி ரூ.24 கோடி மோசடி, உரிமையாளர் குடும்பமே கைது: துப்பாக்கி, 6 தோட்டாக்கள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி 24 கோடி ரூபாய் மோசடி செய்த உரிமையாளர் குடும்பமே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கள்ள துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி.ஜோதி(33). இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் அலுவலகம் நடத்தி, தீபாவளி சீட்டு பணம் பிடித்துவந்தார். மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார். இதுபோல் மாதம் 500 ரூபாய் செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பணம் வசூலித்துள்ளார். இவரிடம் ஏராளமானோர் சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர்.இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு  பணத்தை வசூலித்துவந்துள்ளார். இந்த நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கியவுடன் சீட்டு பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், சீட்டு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். மேலும் சிலர், இது குறித்து திருவள்ளூர் எஸ்பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதுபற்றி அறிந்ததும் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி நிர்வாகத்தினர் வசூல் செய்யும் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜே.பி.ஜோதி தலைமறைவாகிவிட்டார். இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பா. சிபாஸ்  கல்யாண் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.டிஎஸ்பிக்கள் சந்திரதாசன், கந்தன் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் செங்குன்றம் பகுதியில் உரிமையாளர் ஜோதி பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்படி, தனிப்படை போலீசார் சென்று அவரை கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் ஜோதியின் தந்தை மதுரை(65), மனைவி சரண்யா (25), தம்பி பிரபாகர் (30) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கள்ளத் துப்பாக்கி, 6 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இதன்பிறகு கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post தீபாவளி சீட்டு நடத்தி ரூ.24 கோடி மோசடி, உரிமையாளர் குடும்பமே கைது: துப்பாக்கி, 6 தோட்டாக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: