திருவாரூரில் இன்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கூட்டம்

திருவாரூர், நவ.28: திருவாரூர் மாவட்டத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது என்று கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில் உலக முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்க்கும் நோக்குடன் தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8ம்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட அளவிலான இந்த சிறப்பு கூட்டம் திருவாரூர் காரைக்காட்டு தெருவில் இயங்கி வரும் தனியார் (செல்வீஸ்) ஓட்டலில் காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

எனவே திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் மாவட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பிற மாவட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தொழில் துவங்குவதற்கு முன் வரும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் தமிழ்நாடு வணிக வசதியாக்கல் சட்டம் 2017ன் படி அனைத்து உரிமங்கள் மற்றும் வரைபட ஒப்புதல் ஆகியவை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உற்பத்தி நிறுவனங்களும் இதர அறிய வாய்ப்பை பயன்படுத்தி தமது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தினை அனுகிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூரில் இன்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: