திமுகவை பாதுகாத்தவர் பேராசிரியர்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

பெரம்பூர்: மு.க.ஸ்டாலினை தலைவராக்கி திமுகவை பிளவுபடாமல் பாதுகாத்தவர் பேராசிரியர்  அன்பழகன்  என கொளத்தூரில் நடந்த விழாவில்  அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, “முத்தமிழுக்கு தோழமையானவர்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் கொளத்தூரில் நேற்று நடைபெற்றது. கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். திமுகவின் முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  மற்றும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி  உள்ளிட்டோர் பலர் உரையாற்றினர். நிகழ்ச்சியில், ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். விழாவில், அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்: இளமை காலத்தில் அண்ணாவிடன் கருத்துகளை அழுத்தம் திருத்தமாக பேசக்கூடியவர் பேராசிரியர். கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அவர் மதிய நேரத்தில் வீட்டுக்கு சென்றதில்லை. கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தாலும் யாரையும் மிக எளிதாக நீக்கமாட்டார். எல்லா வசதி வாய்ப்பும், பேச்சு, எழுத்து, படிப்புத்திறமை இருந்தும் இறுதிவரை கலைஞருடன் இருந்தார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராக்கி திமுகவை பிளவு படாமல் பாதுகாத்தவர் பேராசிரியர். இளையவர்களை மதித்து அனைவருக்கும் சுயமரியாதை வழங்கியவர். ஜெயலலிதா இறந்து இதுவரை அதிமுக சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தவில்லை. ஆனால் பேராசிரியருக்கு நூற்றாண்டு விழா என்பதை கடந்து நூற்றாண்டு நிறைவு விழா நடத்தி அவரது புகழை பரப்பி வருகிறார், முதலமைச்சர். கொளத்தூர் தொகுதிக்கு வாரந்தோறும் வருவதால், எங்களுக்கும் எங்களது தொகுதிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்கவேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது.  முதலமைச்சர் கொளத்தூர் தொகுதியில் 3 முறையல்ல, எத்தனை முறை நின்றாலும் அவர்தான் வெற்றிபெறுவார்”  என்றார்.அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்: பேராசிரியர் நூற்றாண்டு விழா ஆண்டு  முழுவதும் கொண்டாடப்படுவது மட்டுமல்லாமல் நூற்றாண்டு நிறைவு விழாவை  ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பி பார்க்கும் வகையில் நடத்தவேண்டும் என  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கொளத்தூர் மேற்கு பகுதி திமுக  சார்பில் நிகழ்ச்சி நடந்து வருகிறது. சென்னை டிபிஐ வளாகத்திற்கு  பேராசிரியர் பெயர் சூட்டி அவரது பெயரில் நினைவுத்தூண் மற்றும் சிலை  நிறுவியவர் முதலமைச்சர். பேராசிரியர் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவுவதற்கு  காரணம் முதலமைச்சர். பேராசிரியரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் முதல்வர்  ஆட்சி செய்து வருகிறார் என்றார். நாஞ்சில் சம்பத் பேசுகையில், ஆணாக பிறந்த தமிழ் அன்னை பேராசிரியர், திராவிட இயக்க வரலாற்றில் கலைஞரும், பேராசிரியரும் தனித்து நிற்கிறார்கள். திமுகவில் பயணித்த பல நிர்வாகிகள் தொடர்ந்து பயணிக்க முடியாமல் கட்சியைவிட்டு வெளியேறினர். ஆனால், பேராசிரியர் இந்த இயக்கத்தில் உறுதியாக பயணித்தார். திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் இரண்டு மலை இருக்கும். அதில் ஒரு மலை கலைஞர் என்றால், மற்றொரு மலை பேராசிரியர். எம்ஜிஆர், வைகோ போன்றவர்கள் வெளியேறியபோதும் கலைஞர் நம்பிக்கையோடு இருந்ததற்கு காரணம் பேராசிரியர்தான். சாகடிக்கப்பட்ட சனாதனத்திற்கு உயிர் கொடுக்கும் வேலையை ஆளுநர்கள் செய்து வருகின்றனர்  என்றார்….

The post திமுகவை பாதுகாத்தவர் பேராசிரியர்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: