தமிழக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் வழிப்பறி கொள்ளையை தடுக்க வேண்டும்: மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு ஓட்டுநர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு வழிப்பறி கொள்ளைகள் அறங்கேற்றப்படுகிறது. எனவே இதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்ேபார்ட் காங்கிரஸ் சார்பில், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் பல பகுதிகளில் சுங்கச்சாவடிகள் அருகிலும் மேம்பாலங்கள் மேலேயும், நெடுஞ்சாலைகளிலும் வாகனங்களை வழிமறித்து ஓட்டுநர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. ஒரு ஓட்டுநர் இரவு முழுவதும் விடியவிடிய கண்விழித்து வாகனத்தை இயக்குவதாலேயே அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கிறது.குறிப்பாக, பொதுமக்கள் முதல் அரசாங்க அதிகாரிகள் வரை பல்லாயிரக்கணக்கானோருக்கு, காலை முதல் மாலை வரை பயன்படுத்துகிற பால், குடிநீர், மருத்துவ பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தும் கிடைக்கப்பெறுகின்றன. இந்நிலையில் தற்பொழுது கொரோனா பொது முடக்கம் நீடித்து இருப்பதினால் சாலைகளில் இரவு நேரங்களில் மேலும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் நீடித்திருக்கும் நிலையில், தமிழக சுங்கச்சாவடிகளில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் நீண்ட நேரம் வரிசையில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. முக்கிய அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.மேலும் வாகன ஓட்டிகள் நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு வரிசையில் இருந்து மற்றொரு வரிசைகளுக்கு மாறி மாறி செல்வதும் அவ்வப்போது சுங்கச்சாவடிகள் நிர்வாகம் குண்டர்களை வைத்து ஓட்டுநர்களை தாக்குவதும் நடந்து வருகிறது. கடுமையான சுங்கச்சாவடி நெரிசலால் கொரோனா தொற்று பரவும் அபாயமும், வாய்ப்புகளும் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளை வாகனங்கள் நெரிசல் இல்லாமல் தாமதமின்றி செல்வதற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து பொது முடக்கத்தை ரத்து செய்யும் வரை அனைத்து வாகனங்களையும் இலவசமாக சென்றுவர அனுமதிக்க வேண்டும்.காவல்துறை மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், ஓட்டுநர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி உறுதிப்படுத்துமாறும், ஓட்டுநர்களுக்கு அரசின் மூலம் நெடுஞ்சாலைகளில் உணவு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post தமிழக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் வழிப்பறி கொள்ளையை தடுக்க வேண்டும்: மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: