சேதமான ஆதார் மைய கட்டிடத்தை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவாடானை, ஜூன் 8: திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் மையக் கட்டிடம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.திருவாடானை தாலுகாவில் உள்ள கருமொழி, நெய்வயல், குருந்தங்குடி, கட்டவிளாகம், மங்களக்குடி, ஓரியூர், எஸ்.பி.பட்டிணம், வட்டாணம், தொண்டி, திருவெற்றியூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அப்பகுதி பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் பிறந்த தேதி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆதார் மையத்திறகு தினசரி வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த ஆதார் மையக் கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் பொது இ.சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இ.சேவை மையத்தின் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்று, ஓபிசி சான்று உள்ளிட்டவைகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறும் வகையிலும் மற்றும் கணினி பட்டா, விதவைச் சான்று, ஆண் வாரிசு இல்லா சான்று உட்பட அனைத்து கணினி வழிச்சான்றுகளும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவதற்காகவும் தினசரி பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆதார் மையக் கட்டிட மேற்கூரையில் முட்செடிகள் படர்ந்து மரக்கன்றுகள் முளைத்து முறையான பராமரிப்பு இன்றி உள்ளது. அதனால் இந்த கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த ஆதார் மையம் மற்றும் பொது இ.சேவை மையம் செயல்படும் கட்டிடத்தில் உள்ள கணினிகள், தளவாடச் சாமான்கள் என அனைத்தும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
மேலும் இந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் இந்த இரு மையங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் தினசரி ஒருவித அச்சத்துடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் உரிய பராமரிப்பு இன்றி சேதமடைந்த இந்த ஆதார் மையக் கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித் தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேதமான ஆதார் மைய கட்டிடத்தை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: