சிவகங்கை மாவட்டத்தில் தொழிற்கூடங்கள் நிறுவ விரைந்து உரிமம் அளிப்பு

சிவகங்கை, டிச. 31: சிவகங்கை மாவட்டத்தில் தொழிற்கூடங்கள் நிறுவ தொழில் முனைவோர்களுக்கு உரிமம் உள்ளிட்ட தேவையான உதவிகள் விரைந்து செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், மேம்பாடு அடைய செய்யவும் தற்போது குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன கொள்கைகள் எளிமையாக்கப்பட்டு தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளை களைய தீர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு வாயிலாக ஒற்றை சாளர முறையில் தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு தேவையான அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்புகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஆகியவற்றை அரசு துறைகள், நிறுவனங்களிடமிருந்து உடனுக்குடன் பெற்று கொள்ள உரிய ஆவண விபரங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தால் உரிய காலவரையறைக்குள் குழு தேவையான ஆணைகளை பிறப்பிக்கும். எனவே தொடர்புடைய அரசு துறைகள், அரசு நிறுவனங்கள், அமைப்புகள் இதில் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாக அமைந்துள்ளது.

மேலும் தேவையற்ற கால இடைவெளி முற்றிலுமாக தவிர்க்கப்படும். இந்த நடைமுறையை சிவகங்கை மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தேவையான அனைத்து உரிமங்கள், ஒப்புதல்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம். கூடுதல் தகவல் அறிய சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கை மாவட்டத்தில் தொழிற்கூடங்கள் நிறுவ விரைந்து உரிமம் அளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: