சிதம்பரத்தில் 24 செ.மீ மழை கொட்டி தீர்த்தது பள்ளி, தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது

சிதம்பரம், ஜன. 9: சிதம்பரத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மிக கனமழை பெய்தது. ஒரே நாளில் 24 செ.மீ மழை பெய்தது. இதனால் வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவதோடு, சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அண்ணாமலை நகர், சிவபுரி, அகரநல்லூர், பழைய நல்லூர், வல்லம்படுகை, பெராம்பட்டு, நடராஜபுரம், குமாரமங்கலம், கனகரபட்டு, தெற்கு பிச்சாவரம், வேலக்குடி, சிவாயம், திட்டு காட்டூர், அக்கறை ஜெயம் கொண்டபட்டினம், மணலூர், பாலத்தங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் கனமழையால் தண்ணீர் தேங்கி உள்ளது. நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்த குளத்தில் தண்ணீர் குறிப்பிட்ட அளவு நிரம்பியது.

மேலும் சிதம்பரத்தின் பிரதான மேல வீதி, கீழவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, பேருந்து நிலையம் செல்லும் வழி உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகராட்சி நிர்வாகம் மூலம் அனைத்து வடிகால்களும் முன்கூட்டியே சரி செய்ததால், நகரில் சாலைகளில் தண்ணீர் எங்கும் தேங்காமல் இருந்தது. அதேபோல், அதேபகுதியில் புதிதாக புணரமைக்கப்பட்ட பெரியண்ணா குளம் நிரம்பியது. மேலும் பாசிமுத்தான் ஓடை மற்றும் மணலூர் அருகே உள்ள பாலுத்தங்கரை பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, வெள்ள நீரை அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அண்ணாமலைப் பல்கலையில் தேர்வுகள் ஒத்திவைப்பு
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொடர் மழை காரணமாக கல்லூரிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதேபோல் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post சிதம்பரத்தில் 24 செ.மீ மழை கொட்டி தீர்த்தது பள்ளி, தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது appeared first on Dinakaran.

Related Stories: